Monday, March 26, 2012

காதல் எனும் கருத்தாக்கமும் அல் குர் ஆனும்



[ காதலும் ஆழமான அன்பு தான். ஆனால் அதில் வெறி இருக்கும். காதல் உணர்ச்சிபூர்வமானது. காம உணர்வின் கலப்பால் இந்த வடிவை அது பெறுகிறது.

அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையிலான தொடர்பில் அன்பிருக்க வேண்டும் என்கிறது. அத்தோடு ரஹ்மத் எனும் இரக்கமும் இருக்க வேண்டும் என்கிறது.

இரக்கம் அல்லது அருள் - ரஹ்மத் இன்னொருவரை நோக்கி எழுகின்ற கலப்பற்ற தூய அன்புணர்வு. பலவீனத்தை மன்னித்துவிடும். துன்பம் கண்டு இரங்கும் உணர்வு அது. இது கணவனுக்கும் மனைவிக்குமிடையே அவசியம் நிலவ வேண்டிய உணர்வு என்கிறது அல்குர்ஆன்.

அத்தோடு மனைவி கணவனுக்கு அமைதி தருபவளாக அமைய வேண்டும். இவ்வாறு அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையே காணப்பட வேண்டிய உணர்வுத் தொடர்பை வரையறுக்கிறது.]




"காதல்" என்ற சொல்லுக்கு அரபு மொழியில் நிகரான சொல் "ஹுப்" என்பதாகும். எனினும் "ஹுப்" என்ற சொற்பிரயோகம் அன்பு, விருப்பம் என்ற கருத்தில் பொதுவாகவே அரபு மொழியில் பிரயொகிக்கப்படுகிறது. இந்த வகையில் "ஹுப்" என்ற சொற்பிரயோகத்தை அல்குர்ஆன் எவ்வாறு பாவிக்கிறது என்பதனை அல்குர் ஆனில் தேடினேன்.

முதலில் கணவன், மனைவி தொடர்பை விளக்கும் அல்குர்ஆனின் வசனங்களைத் தேடிய போது, அல்குர்ஆனின் வித்தியாசமான பிரயோகத்தைக் கண்டு ஆச்சரியப்படாதிருக்க முடியவில்லை. எங்கெல்லாம் "ஹுப்" என்ற சொற்பிரயோகத்தை பாவிக்க வேண்டுமோ அங்கெல்லாம் அல்குர்ஆன் அதனைப் பாவித்திருக்கவில்லை.

"உங்களிலிருந்தே உங்களுக்கான ஜோடியை, அவளிடத்தில் நீங்கள் அமைதி காணவேண்டும் என்பதற்காகப் படைத்திருப்பது அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும். உங்களிடையே நேசத்தையும் இரக்கத்தையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்" (அர் ரூம்-21).

இந்த வசனத்தில் "அமைதி காணல்" என்ற பிரயோகம் ஆண், பெண் தொடர்பின் நோக்கத்ததை மிக ஆழ்ந்து விளக்கிவிடுகிறது. வீட்டுக்கு வெளியே உழைத்து, போராடிவரும் ஆணுக்கு பெண்ணின் தொடர்பே அமைதியை வழங்குகிறது. வெளிப்போராட்டத்தில் சூடுபிடிக்கும் அவன் உடம்பும் நரம்புகளும் அமைதியடைகின்றன.

அடுத்த பகுதி அவர்களுக்கு மத்தியில் இரக்கத்தில் நேசத்தையும் அல்லாஹ் ஆக்கியுள்ளதாக அல்குர்ஆன் கூறுகிறது. இங்கு அல்குர்ஆன் பாவித்த சொற்கள் "ரஹ்மத்", "மவத்தா" என்பவையாகும். இவ்விரண்டு சொற்களும் ஆண், பெண்ணுக்கிடையிலான வித்தியாசமான தொடர்பைக் காட்டும் காதல் என்ற கருத்தில் ஒருபோதும் பிரயோகிக்கப்படுவதில்லை.

அதிலும் குறிப்பாக "ரஹ்மத்" என்ற சொல் தாய் தந்தை பிள்ளையிடம் காட்டும் பரிவை, ஏழையிடம் காட்டுகின்ற அன்பை, இறைவன் அடியார்களிடம் கொண்டுள்ள அருளைக் காட்டவே பயன்படுத்தப்படுகிறது. "மவத்தா" என்ற சொல்லும் இயல்பான நேசத்தை, வெறியேதுமற்ற அன்பைக் காட்டவே பாவிக்கப்படுகிறது. வதூத் என்ற இச்சொல் இறைவனின் திருநாமங்களில் ஒன்றாக அல்குர்ஆன் பாவிக்கிறது.

காதலும் ஆழமான அன்பு தான். ஆனால் அதில் வெறி இருக்கும். காதல் உணர்ச்சிபூர்வமானது. காம உணர்வின் கலப்பால் இந்த வடிவை அது பெறுகிறது. அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையிலான தொடர்பில் அன்பிருக்க வேண்டும் என்கிறது. ஆனால் அத்தோடு ரஹ்மத் எனும் இரக்கமும் இருக்க வேண்டும் என்கிறது.

இரக்கம் அல்லது அருள் - ரஹ்மத் இன்னொருவரை நோக்கி எழுகின்ற கலப்பற்ற தூய அன்புணர்வு. பலவீனத்தை மன்னித்துவிடும். துன்பம் கண்டு இரங்கும் உணர்வு அது. இது கணவனுக்கும் மனைவிக்குமிடையே அவசியம் நிலவ வேண்டிய உணர்வு என்கிறது அல்குர்ஆன். அத்தோடு மனைவி கணவனுக்கு அமைதி தருபவளாக அமைய வேண்டும். இவ்வாறு அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையே காணப்பட வேண்டிய உணர்வுத் தொடர்பை வரையறுக்கிறது.

"ஹுப்" (அன்பு-காதல்) என்ற சொல்லையும் அல்குர்ஆன் சிலபோது பாவித்துள்ளது. அதனை எப்படிப் பாவித்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.

ஸூரா யூஸுஃப், இரு வகை அன்பு பற்றி விளக்குகிறது. யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது மகன் யூஸுஃபோடு கொண்டிருந்த ஆழ்ந்த அன்பை அது விளக்குகிறது. அவரது அடுத்த பிள்ளைகள் பொறாமைப்படுமளவுக்கு யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் மீது யஃகூப் அலைஹிஸ்ஸலாம் கவலைப்பட்டார், அழுதார். யஃவுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கவலையை அல்குர்ஆன் தெளிவாக விவரிக்கிறது.

அடுத்த வகையான அன்பு, யூஸுஃப், அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு எகிப்து நாட்டு மன்னனின் மனைவி வைத்த தொடர்பு. மன்னனின் மனைவி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தனது வலையில் வீழ்த்தி தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள எவ்வாறு முயன்றாள் என்பதனை அல்குர்ஆன் விவரிக்கிறது. அந்தத் தொடர்பு பற்றிய செய்தி வெளியே எவ்வாறு பரவியது என விளக்கும் போது அல்குர்ஆன் "அவள் யூஸுஃப் மீது காதல் கொண்டு மயங்கினாள்" எனக் கூறுகிறது. இந்த இடத்தில் "ஹுப்" என்ற சொல்லை அல்குர்ஆன் பாவித்துள்ளது. பிழையான தொடர்பு என்ற கருத்தைக் கொடுக்கும் வகையிலேயே அல்குர்ஆன் இக்கதையை விளக்கிச் சொல்கிறது.

யஃகூப் அலைஹிஸ்ஸலாம் தனது மகன் கொண்ட அன்பைப் பிழையானது என அல்குர்ஆன் காட்டவில்லை. காதல் ஒரு வகை வெறி, அது ஆசையையும், சுயநலத்தையுமே விளைவிக்கும். பல அனர்த்தங்களுக்கு அது காரணமாக இருக்கும். காதல் கொண்டவனின் கண்களையும் குருடாக்கி அறிவையும் அது மயக்கிவிடும்.பிள்ளைகள் மீது கொள்ளும் இரக்கம் அப்படியானதல்ல. அது பிறர் மீது இரக்கம் கொள்ள வைக்கும், மனதை இலகுவாக்கும், மென்மைப்படுத்தும். இப்பகுதியில் இன்னுமொரு வரலாற்று நிகழ்ச்சியையும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.

எகிப்தில் வாழ்ந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஃபிர்அவ்னுடைய சமூகத்தோடு மோதிக் கொள்கிறார்கள். அப்படி மோதிய ஒரு சந்தர்ப்பத்தில் நாடு கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்பெண்கள் தமது தந்தையிடம் சொல்கிறார்கள். "அவரை வேலைக்காக நீங்கள் அமர்த்திக் கொள்ளுங்கள். பலமும், நம்பிக்கை, நாணயமுமுள்ள ஒருவரை வேலைக்கமர்த்தலே மிகச் சிறந்ததாகும்" எனக் கூறுகிறாள் ஒரு பெண்.பெண்ணின் உள்ளத்தைப் புரிந்து கொண்ட தந்தை அப்பெண்ணை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்து வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்.

ஆரவாரமின்றி, அமர்க்களமின்றி நடந்து முடிந்த பரஸ்பரத் தொடர்பும் திருமணமும் இங்கு எடுத்துக் காட்டப்படுகிறது. ஒரு பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் விரும்புவது சாதாரணமாக நடக்கக் கூடியது. அது இவ்வாறு மிக இயல்பாக நடந்து முடிய வேண்டிய ஒன்று. அதற்கு மேல் அதனைப் பெரிதுபடுத்தி காதலாக்கி, அதில் தெய்வீகத்தைக் கலந்து லைலாவாகி - மஜ்னூவாகி விடுவதுதான் அர்த்தமற்ற செயலாகிறது. ஆண், பெண் தொடர்பு ஒரு பௌதீகத் தேவை. அதனை நிறைவு செய்யக் குடும்ப வாழ்வு என்ற அமைப்பே பொருத்தமானது. அக்குடும்ப ஒழுங்கை அழகாகக் கொண்டு செல்ல இரக்கமும், அன்பும் அவசியம். இக்கருத்தையே இந்த வசனங்கள் தருகின்றன.

அல்குர்ஆனில் மூன்று இடங்களில் இந்த வசனங்கள் எவ்வாறு இக்கருத்தை அழகாக விளக்கியுள்ளன என்பதை இங்கே கண்டோம். உண்மையில் இக்கருத்தை அல்குர்ஆன் இந்த மூன்று இடங்களில் மட்டுமல்ல, குடும்பவாழ்வு பற்றி விளக்கும் பல குர்ஆன் வசனங்களிலும் நுணுக்கமாக விளக்குவதைப் புரிந்து கொள்ள முடியும். இங்கு நாம் நேரடியாக இக்கருத்தை விளக்கும் வசனங்களை மட்டுமே நோக்கினோம். இவ்வாறு எத்தலைப்பை அல்குர்ஆனில் நாம் ஆராய முற்பட்டாலும் அது அழகாக, தெளிவாக அத்தலைப்பு பற்றிய தனது கருத்தைத் தரும். அல்குர்ஆனின் இந்த சிறப்பம்சம் நாம் எண்ணி எண்ணி வியக்கத்தக்கது

Thanks to : 
M.A.M. USTHAZ மன்ஸூர் நளீமி
www.usthazmansoor.com

No comments:

Post a Comment