Thursday, August 16, 2012

ரமழான் நற்சிந்தனை (லைலதுல் கத்ர்)


ரமழான் மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்ததொரு இரவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். லைலதுல் கத்ர் அதாவது கத்ருடைய இரவு என அழைக்கப்படும் அவ்விரவில் தான் அல்குர்ஆன் இறக்கப்பட்டது. லைலதுல் கத்ருடைய சிறப்பை பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
'நிச்சயமாக நாம் அல்குர்ஆனை லைலதுல் கத்ரிலே இறக்கிவைத்தோம. லைலதுல் கத்ர் என்றால் என்ன என்பதை உமக்கு யார் அறிவித்தது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாகும். ஜிப்ரீல் (அலை) அவர்களும் மலக்குமார்களும் இறைவனின் கட்டளையின் பேரில் பூரண சாந்தியோடு உலகிற்கு இறங்குவார்கள். அது அதிகாலை உதயம் வரை நீடிக்கும்'. (ஸூறதுல் கத்ர்)
மலக்குமார்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் வருகையால் உலகம் அமைதியடைகிறது. அந்த இரவில் செய்யும் நன்மைகளுக்கு ஏனைய இரவுகளை விடவும் விஷேடமான கூலிகள் காத்திருக்கின்றன.
ரமழானில் ஒரு தினத்தில் காணப்படும் லைலதுல் கத்ர் இரவை அல்குர்ஆனோ ஸூன்னாவோ சரியாக வரையருத்து கூறவில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் அதனை     ரமழான் மாதத்தில் இறுதி பத்தில் தேடிக்கொள்ளுமாறு கூறினார்கள்.
அதிலும் ரமழான் மாதத்தில் இறுதி பத்தில் ஒற்றைப்பட இரவுகளில் தேடிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். லைலதுல் கத்ருடைய பூரண பலன்களை பெற்று இறை திருப்தியை அடைந்துகொள்வதற்காக ரமழான் மாதத்தின் இறுதி பத்தில் ஒற்றை இரவுகளில் சிறந்த வணக்க வழிபாடுகளில் எம்மை ஈடுபடுத்திக்கொள்ள அல்லாஹ் கிருபை செய்வானாக.
தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீம்)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

Monday, August 13, 2012

ரமழான் நற்சிந்தனை (பயிற்சி தொடரட்டும்)


அருள்மிகு ரமழானின் இறுதி வேளையை அடைந்துவிட்டோம். இறைவனுடனான இறுக்கமான உறவை  பேண பல முயற்சிகளை மேற்கொண்டோம். இறை வேதமாகிய அல்குர்ஆனுடன் நெருக்கமான உறவைப் பேணினோம்.
அல்குர்ஆனை அதிகமாக ஓதினோம். பிறர் ஓதுவதை செவிமடுத்தோம். அதன் கருத்துக்களை ஓரளவு புரிந்துகொள்ள முயன்றோம். அல்லாஹ்வின் வார்த்தையோடு தொடர்புபட்டு அவனது நெருக்கத்தை ஏற்படுத்தினோம்.
பர்ளான தொழுகைகளை முடிந்தளவு கூட்டாக நிறைவேற்றினோம். முன் பின் ஸூன்னத்துக்களை பேணி தொழுதோம். இரவு நேர வணக்கங்களில் ஈடுபட்டோம். ஏழை எளியவர்களின் கஷ்டங்களிலே பங்கெடுத்தோம். தான தர்மங்களை வாரி வழங்கினோம். இறைமன்னிப்பை பெற்றுக்கொள்வதற்காக பாவமன்னிப்புத் தேடினோம்.
ரமழானின் பூரண பயனை பெற்றுக்கொள்வதற்காக நாம் பல முயற்சிகளை எடுத்தோம். மனோ இச்சைகளுக்கு மாற்றமாக பாவ செயல்களிலிருந்து தூரமாகினோம். இப்படியாக ஒரு மாத காலம் ரமழானில் மிக சிறந்த பயிற்சியை பெற்றுக்கொண்டோம்.
இந்த பயிற்சிகளும், உயர்ந்த ஆத்மீக செயற்பாடுகளும், சிறந்த பண்பாடுகளும் ரமழானுக்கு பின்னரும் எம்மிலே பிரதிபலிக்கட்டும். ரமழானின் தாக்கம் முழு வாழ்வாழ்விலும் பாதிப்புச் செலுத்தட்டும். நோன்பின் பின்னரான வாழ்வுக்காக நாம் தயாராகுவோம். இறைவன் எமக்கு கிருபை செய்வானாக.
தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீம்)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

Sunday, August 12, 2012

ரழழான் நற்சிந்தனை (மரணம் நிச்சயம்)

மரணம் நிச்சயமானது. உலகத்தில் பிறந்த அனைவரும் அதனை சந்தித்தே தீருவர். ஒவ்வொருவருக்கும் வரையறுக்கப்பட்ட நேரத்தில் மரணம் அவரை வந்தடையும்.
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும் என அல்லாஹூதஆலா சொல்கிறான். மனிதனது உலக வாழ்வு ஒரு சோதனை கூடமாகும். மறுமையில் சுவனத்தை அடைந்து கொள்ள சிறந்த சந்தர்ப்பமாகவே இந்த உலக வாழ்வு அமைந்துள்ளது.
மரணத்துக்கு முன்னர் நிரந்தர வாழ்வுக்காக எம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. உலக வாழ்வின் முற்றுப்புள்ளியே மறுமை வாழ்வின் ஆரம்பமாக அமைகின்றது. மரணத்துக்கான நேரம் வந்துவிட்டால் மேலதிக அவகாசம் எதுவும் வழங்கப்படமாட்டாது.
எனவே, மரணத்துக்கு முன்பே செயற்படவேண்டியுள்ளது. இறுதி தருவாயில் கடந்து போன காலங்கள் குறித்து சிந்திப்பதிலும், கைசேதப்படுவதிலும் எதுவும். நடக்கப்போவதில்லை. எமது இந்த வாழ்க்கை மிக சிறந்த பாக்கியம். அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோமாக.

தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீம்)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

Saturday, August 11, 2012

ரமழான் சிந்தனை (இறையச்சத்தை அடைவோம்)


நோன்பு இறையச்சத்தை ஏற்படுத்தும் ஒரு வணக்கம். அதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

"விசுவாசிகளே நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்கு உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நோன்பு கடமையாக்கப்பபட்டிருந்தது போல உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது." (அல் பகறா-186)

எனவே, நோன்பு நோற்பதன் ஊடாக உயர்ந்த ஆத்மிக பண்பான இறையச்சம் ஏற்படுகிறது. உண்மையில் இறையச்சம் என்பது இறைவனுடைய ஏவல்களை மனப்பூர்வமாக ஏற்றுநடக்கும் மனோநிலையையும் விலக்கல்களிலிருந்து தவிர்ந்து கொள்ளும் மனோநிலையையும் பெறுவதாகும்.

நன்மைகளை நோக்கி ஆர்வத்தை தூண்டி தீமைகளை விட்டும் தவிர்ந்துகொள்ளும் தக்வா எனும் ஆயுதத்தை பெற்றுத்தரும் வணக்கமாக நோன்பு காணப்படுகிறது. அந்த வகையில்தான் நோன்பு ஒரு கேடயமாக அமைகிறது. ஏவல்களில் பொடுபோக்காக இருப்பதை விட்டும் பாதுகாத்து விலக்கல்களை செய்வதை விட்டும் தடுக்கும் பாதுகாப்பு கருவியாக நோன்புள்ளது.

இந்த வகையில் நோன்பு ஏற்படுத்தும் தக்வா உலகிலே சிறந்த பண்புகளோடு ஒரு முஸ்லிமை வாழவைத்து மறு உலக வாழ்வில் அவனுக்கு சுவனத்தை பெற்றுக்கொடுக்கிறது.

இறையச்சமுள்ளவர்களுக்கே சுவர்க்கம் தயார்படுத்தப்பட்டுள்ளதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். "எங்களது அடியார்களில் யார் இறையச்சமுள்ளவர்களாக இருந்தார்களோ அவர்களை அந்த சுவனத்தின் வாரிசுகளாக ஆக்குவோம்.''(மர்யம்-63)

மனித வாழ்வின் இறுதி இலட்சியமான சுவனத்தை அடைந்து கொள்ள தக்வா எனும் சாதனத்தை நோன்பினூடாக பெற்றுக்கொள்ள முனைவோமாக!  

தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீம்)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

Friday, August 10, 2012

ரமழான் நற்சிந்தனை (நோன்பு மனித நலனாகும்)

மனித சமுதாயத்தில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கோடு நோன்பு நோற்கும் வழமை எல்லா சமுதாயங்கள் மீதும் விதியாக்கப்பட்டுள்ளது. இத்தகைய தொன்மை வாய்ந்த வணக்கம் நபி (ஸல்) அவர்களை விசுவாசித்து வாழும் விசுவாசிகள் மீதும் அல்லாஹ்வினால் விதியாக்கப்பட்டுள்ளது.

நோன்பு என்பது வணக்கத்தின் பெயர். ரமழான் என்பது மாதத்தின் பெயர். ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதத்தை அடையும் போது முஸ்லிம்கள் நோன்பு நோற்பது கடமையாகும்.  ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை உண்ணல், பருகல், அனுபவித்தல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்து பாவ காரியங்களிலிருந்து விலகி, நன்மையான செயற்பாடுகளில் ஈடுபடுவதையே நோன்பு என்பது குறிக்கின்றது.

ரமழான் மாதம் முழுவதும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது மிக நீண்டதொரு பயிற்சி அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ளது. நோன்பு எனும் கடமை மனிதர்களை வருத்துவதற்காக கடமையாக்கப்பட்டதொன்றல்ல. உடம்பையும், மனித ஆசைகளையும் கட்டுப்படுத்தி மனிதனை கஷ்டத்துக்கு உட்படுத்துவது நோன்பின் நோக்கமுமல்ல. அத்துடன் நோன்பு உண்ணாவிரதம் போன்ற செயற்பாடும் அல்ல.

மாற்றமாக மனித நலனை கருத்திற்கொண்டு மனிதனை படைத்து, அவனது சகல விடயங்களையும் அறிந்த இரட்சகனால் விதியாக்கப்பட்ட உயர்ந்த ஆத்மீக பயிற்சியாகும். அற்பமான மனோ இச்சைகளுக்கு கட்டுப்படும் மனிதனை உயர்ந்த இலக்குகளோடு வாழும் மனிதனாக வாழவைப்பதே நோன்பின் நோக்கமாகும். 

பாவங்களுக்கும் தீமைகளுக்கும் முன்னால் எப்படி தனது மனதை கட்டுப்படுத்தி வாழ வேண்டும் என்ற பயிற்சியை நோன்பு அவனுக்கு வழங்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மனித விருப்பங்களை விட படைத்த அல்லாஹ்வின் விருப்பங்களுக்கு அடி பணியும் மனோநிலையை உண்டுபண்ணுகிறது. 

உலக மற்றும் மறுமை பாக்கியங்களை நோன்பு பெற்றுத்தருகிறது. இத்தகைய மனித நலன்களை ஏற்படுத்தி தரும் நோன்பை நோற்று பயனடைவோமாக.

தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர் 
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

Thursday, August 9, 2012

ரமழான் சிந்தனை (ஸதகா கொடுத்தல்)


ரமழான் ஸதகாவின் மாதம். ஏழை எளியவர்கள் சந்தோசமாக வாழ்வதற்காக வாரி வழங்கும் மாதம். தான தர்மங்கள் செய்வதற்கூடாக செல்வத்தில் எந்தக்குறைவும் ஏற்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் வாக்குறுதியளித்துள்ளார்கள்.
ஏனைய காலங்களைவிட ரமழானில் ஈகை வழங்கும் நற்செயலை அதிகமாக மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மக்களில் அதிகம் கொடை வழங்குபராக இருந்தார்கள். குறிப்பாக ரமழானில் வீசும் காற்றை விட வேகமாக தர்மம் செய்பவராக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். ரமழானில் வழங்கப்படும் தர்மமே தர்மங்களில் மிகச்சிறந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹூதஆலா அளித்த செல்வங்களுக்காக அவனுக்கு நன்றி செலுத்துவதற்காக செல்வத்திலிருந்து தர்மம் செய்வது பணக்காரர்களின் தார்மிகக்கடமையாகும்.
அதேவேளை தான தர்மம் செய்வதானது செல்வத்தின் மீது ஏற்படும் அளவு மீறிய பற்று, சொத்தாசை, உலோபித்தனம் போன்ற கீழ்த்தரமான பண்புகளை நீக்கி, சமூகத்திலுள்ள பலவீனர்களை மிகவும் மனநிம்மதியோடும், சந்தோஷமாகவும் வாழவைக்கும் உயர்ந்த செயற்பாடாக விளங்குகின்றது. எனவே தர்மம் செய்து இறை திருப்தியை பெற்றுக்கொள்ள முனைவோமாக.

தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீம்)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

Wednesday, August 8, 2012

ரமழான் சிந்தனை (பத்ர் வெற்றி)


ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ரமழான் மாதம் 17ஆவது நாள் நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் மக்கத்து இறை நிராகரிப்பாளர்களுக்கு எதிராக போராடி வெற்றி பெற்றார்கள்.
இது பத்ர் வெற்றி என அழைக்கப்படுகிறது. மிகவும் சிறிய முஸ்லிம் படை ஆயிரம் போர் வீரர்களையும் பாரிய போர் ஆயுதங்களையும் கொண்ட படையை அல்லாஹ்வின் அருளால் வெற்றி கொண்டது.
அந்த வெற்றி நிகழ்ந்த தினத்தை அல்குர்ஆன் 'யௌமுல் புர்கான்' என அழைக்கிறது. அதாவது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டும் தினம் என்பது இதன் பொருளாகும்.
மக்கத்து இறை நிராகரிப்பாளர்கள் இஸ்லாத்தை உலகில் வாழவிடக்கூடாது என்பதற்காக படையெடுத்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்களும் இப்படியொரு பாரிய யுத்தத்தை எதிர்பார்த்திருக்கவுமில்லை. எனினும் இறை நாட்டத்தின் பிரகாரம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
முஸ்லிம் அணியில் பெரும் படைப்பலம் இருக்கவுமில்லை. மக்கத்து இறை நிராகரிப்பாளர்களை மிகைக்கும் அளவுக்கு போர் தளபாடங்களும் இருக்கவுமில்லை. என்றாலும் அவர்களிடம் இறைவன் மீதான உறுதியான நம்பிக்கை காணப்பட்டது. உயர்ந்த ஆத்மீக பண்புகள் காணப்பட்டன. சிறந்த ஒழுக்க விழுமியங்கள் இருந்தன.
இறை நிராகரிப்பாளர்களின் போர் ஆயுதங்களுக்கு முன்னால் இஸ்லாமிய படை ஆத்மீக பலத்தை முன்னிறுத்தி போராடி மிகப்பெரிய வெற்றியை இறைவனின் அருளினால் சாதித்தது. பத்ர் வெற்றி தரும் இத்தகைய பாடங்களை நாம் கடைப்பிடிப்போமாக. 
 
தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீம்)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

Tuesday, August 7, 2012

ரமழான் நற்சிந்தனை (அல் குர்ஆனை புரிந்து கொள்வோம்)

அல் குர்ஆன் மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையில் உறவை ஏற்படுத்துகிறது. அல் குர்ஆனுக்கூடாக ஒரு விசுவாசி உயர்ந்த ஆத்மீக தரத்தை அடைகிறான். அவனது சிந்தனைகளையும், எண்ணங்களையும் அது விரிவுபடுத்துகிறது. உலகின் அற்ப நோக்கங்களிலிருந்து அவனை விடுவித்து உயர்ந்த இலக்குகளுக்காக அவனை செயல்பட வைக்கிறது. 

அவனது ஆளுமை பண்புகளை விருத்தியடையச் செய்கிறது. இத்தகைய விளைவுகளை உண்டுபண்ணும் குர்ஆனுடனான எமது உறவு மிகவும் பலமானதாக அமைய வேண்டும்.அல் குர்ஆனை ஓதுவதோடு மாத்திரம் அதனூடான தொடர்பை நாம் நிறுத்திக் கொள்ளக் கூடாது. அல் குர்ஆனை ஓதுவது மிகப்பெரும் இபாதத். 

அல்லாஹ்விடத்தில் ஏராளமான நன்மைகளைப் பெற்றுத் தரும் செயலாக அல் குர்ஆனை ஓதுதல் காணப்படுகிறது. எனினும் குர்ஆனை ஓதுவதோடு அதனை புரிந்து கொள்ளவும் நாம் முனைய வேண்டும். குர்ஆனை அல்லாஹ் இறக்கியதன் நோக்கமே மனிதன் அதிலிருந்து வழிகாட்டல்களைப் பெறுவதாகும். அதன் பொருளைப் புரிந்து கொள்ளாமல், அதன் கருத்துக்களை விளங்காமல் எப்படி நாம் வழிகாட்டல்களை பெறமுடியும்.

குர்ஆனுக்கூடாக நாம் எப்படி தாக்கமடைய முடியும். குர்ஆன் கூறும் கருத்துக்களை சிந்திக்காது ஓதுவோரை குர்ஆன் மிகக் கடுமையாக கண்டிக்கிறது. எனவே இறைவனின் விருப்பமாகிய குர்ஆனை புரிந்து, வாழ்வில் செயற்படுத்தும் விசுவாசிகளாக எம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். எமது சக்திக்கு உட்பட்ட வகையில் குர்ஆனைப் புரிந்துகொள்ள முனைவோமாக.

தொகுப்பு:

அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர் 
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை


Monday, August 6, 2012

ரமழான் நற்சிந்தனை (தர்மம் விருத்தியை ஏற்படுத்தும்)

ரமழான் நோன்பின் மாதம் போலவே தான தர்மங்கள் வழங்கும் மாதமுமாகும். நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் வீசும் காற்றை விட வேகமாக தான தர்மங்கள் செய்பவர்களாக இருந்தார்கள். அல்லாஹ் எமக்களித்த செல்வத்திற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். செல்வம் அல்லாஹ்வுக்கு சொந்தமானது. அதனை சிலருக்கு அதிகமாக கொடுத்து சோதிக்கிறான். இன்னும் சிலருக்கோ அளவாக கொடுத்துள்ளான்.

இந்நிலையில் செல்வம் வழங்கப்பட்ட அடியான் அதனை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு ஏழை எளியவர்களுக்கு தர்மம் என்ற வகையில் உதவிகளை செய்ய வேண்டியுள்ளான். தான தர்மங்கள் அதிகமாக செய்வதன் மூலமாக சொத்தாசை, சுய நலம் போன்ற தீய பண்புகளிலிருந்து விடுதலை பெற்று உள்ளத்தில் படிந்திருக்கும் கஞ்சத்தனத்திலிருந்து நீங்கி சிறந்த தியாகியாக, கொடைவள்ளலாக மாறிவிடுகிறான்.

அல்லாஹ்வாலும் ஏனைய மனிதர்களாலும் விரும்பப்படக்கூடியவனாக மாறிவிடுகிறான். இத்தகைய ஸதகாவை கொடுப்பதன் மூலம் உள்ளம் தூய்மையடைவதோடு செல்வத்திலும் அபிவிருத்தி ஏற்படுகிறது. எனவே தான் நபி (ஸல்) அவர்கள் ஸதகாவானது செல்வத்தில் எந்த குறையையும் ஏற்படுத்தமாட்டாது என கூறினார்கள். எமது செல்வத்திலிருந்து அதிகம் தர்மங்களை வழங்கி அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக்கொள்ள முன்வருவோமாக.

தொகுப்பு:

அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர் 
ஜாமியா நளீமியா கலாபீடம் – பேருவளை

Sunday, August 5, 2012

ரமழான் சிந்தனை (ரமழான் நற்பண்பாடுகளை வளர்க்கும் மாதம்)


நோன்பு சிறந்த பண்பாடுகளை வளர்க்கின்றது. நோன்பு என்பது வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் மாத்திரமல்ல. மாறாக இறைவன் தடுத்த தீய நடத்தைகளை விட்டும் தவிர்ந்திருப்பதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- "பொய் சொல்வதையும் அதன்படி செயற்படுவதையும் யார் விட்டுவிடவில்லையோ அவர் சாப்பாட்டையோ அல்லது உணவையோ விட்டுவிடுவதில்; அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை" எனவே நோன்பு நோற்பவன் பொய் சொல்வதையும், பொய்யின் அடிப்படையில் செயற்படுவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
அதேபோன்று நோன்பாளி கீழ்த்தரமான வார்த்தைகளை பேசுபவனாகவோ, சண்டை பிடிப்பவனாகவோ இருக்கமாட்டான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-"நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். சத்தமிட வேண்டாம். யாராவது ஏசினால் அல்லது சண்டைக்கு வந்தால் நான் ஒரு நோன்பாளி என சொல்லிவிடுங்கள்".

எனவே நோன்பாளியின் வாயிலிருந்து பண்பான சிறந்த வார்த்தைகள் வெளியாகின்றன. மிகவும் தாழ்மையாக கதைக்கிறான். அவனிடத்திலே பொறுமை காணப்படும். இத்தகைய உயர்ந்த பண்பாடுகளை நோன்பானது ஒரு முஸ்லிமிடத்திலே வளர்க்கின்றது. எனவே எமது நோன்புகளில் இத்தகைய பண்பாடுகளை கடைபிடிப்போமாக.
தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீம்)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

குறிப்பிட்ட நேரத்தில் தொழுவது அல்ஸிமர்ஸ் நோயை 50% குறைக்கும்: அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்!

குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்கால கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல் அவீவ், யாஃபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தகைய நபர்களுக்கு நோயின் கடுமை 24 சதவீதம் குறைவாக இருக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது. அல்ஸிமர்ஸ் நோயை தடுக்க இதர பயிற்சி வகைகளை விட குறித்த நேரத்தில் தொழுவதால் இரட்டிப்பு பலன் கிடைப்பதாக ஆய்வு கூறுகிறது.

குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைப்பதாக இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் Rivka Inzelberg கூறுகிறார்.

65 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 92 பேருக்கு மட்டுமே ஞாபக மறதி நோய் பாதித்துள்ளது. 300 பேருக்கு சிறிய அளவில் பாதித்துள்ளது. மீதமுள்ளோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

Saturday, August 4, 2012

ரமழான் சிந்தனை (இறைவனின் நெருக்கத்தை பெற்றுத்தரும் மாதம்)


அல்லாஹூதஆலா நோன்பு பற்றி ஸூறதுல் பகறாவில் மாத்திரமே பேசியுள்ளான். நோன்பு குறித்து பேசும் தொடர் வசனங்களுக்கிடையில் நேரடியாக நோன்பின் நோக்கம், நோன்பு தொடர்பான சட்டதிட்டங்கள், எதனோடும் தொடர்புபடாத ஒரு வசனம் காணப்படுகிறது.
'என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி கேட்டால் நான் அருகாமையில் இருக்கின்றேன். என்னை அழைத்தால் நான் பதிலளிக்கின்றேன். எனவே அவர்கள் எனக்கு பதிலளித்து விசுவாசம் கொண்டு அவர்கள் நேர்வழி பெறுவர்' என அல்லாஹூதஆலா கூறுகிறான்.
மேற்குறித்த வசனம் நோன்போடு சம்பந்தப்படாத வசனமல்ல. மாற்றமாக இறைவனை அஞ்சி வாழும் மனிதர்களின் அனைத்து செயல்களையும் அல்லாஹ் அங்கீகரிக்க தயாராக இருக்கின்றான்.
நோன்பு விதியாக்கப்பட்டதன் பிரதான நோக்கம் இறையச்சத்தை அடைந்து கொள்வதாகும். இத்தகைய தக்வாவை நோன்பினூடாக பெற்ற அடியார்கள் இறைவனை அணுகும்போது அல்லாஹ் அவனை ஏற்றுக்கொள்கின்றான்.
அவனோ இறைவனுக்கு மிக நெருக்கமானவனாக மாறிவிடுகின்றான். எனவே அடியார்களின் செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படவும், இறைவனின் நெருக்கத்தைப் பெறவும் அடிப்படைக் காரணியாக தக்வா காணப்படுகிறது என்பதை புரிந்து வாழ்வோமாக.
தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீம்)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

Friday, August 3, 2012

ரமழான் நற்சிந்தனை (மக்கா வெற்றி)

ரமழான் பல வெற்றிகளையும், சாதனைகளையும் சுமந்து வந்த மாதமாகும். இஸ்லாமிய வரலாற்றின் வீர தீரச் செயற்பாடுகள் நிகழ்த்தப்பட்ட ஒரு மாதமாக ரமழான் திகழ்கிறது. இந்த ரமழான் மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்களது மிகப் பெரும் சாதனைகளுல் ஒன்றாகிய மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. 

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்று எட்டாவது ஆண்டு ரமழான் மாதம் எட்டாவது நாள் இந்த மாபெரும் வெற்றி நிகழ்ந்தது. நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மக்காவில் துவங்கிய இஸ்லாமிய அழைப்புப் பணி அல்லாஹ்வின் அருளினால் பாரிய வெற்றிகளை பத்தொன்பது வருடங்களுக்குள்ளால் சாதித்தது. 

இஸ்லாம் சத்திய மார்க்கம். அதன் தூய செய்தி உலகமக்கள் அனைவருக்கும் சென்றடைய ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த சக்திகள் வரலாற்றில் தோல்வி கண்டுள்ளன. அதேவேளை இஸ்லாம் அதன் வெற்றிகளை சாதிப்பதற்கும் பாரிய சாதனைகளை நிகழ்த்துவதற்கும் மிகப்பெரிய விலையை கொடுத்தமையும் உண்மையே. எனவே நாம் கொண்டாடும் மக்கா வெற்றி பாரிய தியாகங்களைத் தொடர்ந்து ஈட்டப்பட்ட வெற்றியாகும்.

நபி (ஸல்) அவர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த பூமியில் தனது கொள்கைக்கு அங்கீகாரம் கிடைக்காத போது அங்கிருந்து சென்று மதீனா மக்களது பூரண ஒத்துழைப்போடு இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொண்டு மிகவும் சமாதான முறையில் ஈட்டப்பட்ட வெற்றியே மக்கா வெற்றியாகும். இஸ்லாத்தின் தூய செய்தி உலக மக்களை சென்றடைய வழிசெய்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை என்ற உணர்வை இந்த வெற்றி எமக்கு உணர்த்துகிறது.

தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர் 
ஜாமியா நளீமியா கலாபீடம் – பேருவளை

Thursday, August 2, 2012

ரமழான் நற்சிந்தனை (கியாமுல்லைல் - இரவுத் தொழுகை)

ரமழான் மாதத்தின் பகல் வேளைகளில் நோன்பு நோற்பதற்கூடாகவும் இரவு வேளைகளில் நின்று வணங்குவதற்கூடாகவும் இறைவனை நெருங்க வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. இரவுத் தொழுகை நபி (ஸல்) அவர்களின் மிக முக்கியமான வழி முறையாகும். விஷேடமாக இத்தொழுகையை ரமழானில் நபி (ஸல்) அவர்களும் அவரது தோழர்களும் கடைபிடித்து வந்தனர். 

மிக நீண்ட நேரம் அல் - குர்ஆன் வசனங்களை ஓதி இத்தொழுகையை நிறைவேற்றினார்கள். ரமழான் எனும் போது பிரிக்க முடியாத மிக முக்கிய அங்கமாக கியாமுல்லைல் எனப்படும் இரவுத் தொழுகை காணப்படுகிறது.  "ரமழான் மாதத்தில் தூய்மையான நோக்கத்தோடு யார் இரவு நேரங்களில் நின்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் திருப்தியொன்றை மாத்திரம் எதிர்பார்த்து இரவில் விழுத்திருந்து இத்தொழுகையை நிறைவேற்றுபவர்களின் குற்றங்களை மன்னித்து மேலான பாக்கியங்களை அல்லாஹ் வழங்குகிறான். "மக்களெல்லோரும் தூங்கும் போது நீங்கள் எழுந்து அல்லாஹ்வை வணங்குவதன் ஊடாக நீங்கள் பாதுகாப்பாக சுவர்க்கம் நுழைய முடியும்" என  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இரவுத் தொழுகை உள்ளத்திலே ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரவு நேரத்தில் உலகம் அமைதியடைந்திருக்கும் நிலையில் இறைவனை நினைத்து தொழும் போது ஏற்படும் மன அமைதியும், நிம்மதியும், சிறந்த உளத்தாக்கங்களும் உயர்ந்த மனிதனாக எம்மை வாழவைக்கும். இத்தகைய பாக்கியங்களைக் கொண்ட இரவுத் தொழுகையை விடாது ரமழானில் நிறைவேற்ற அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக.

தொகுப்பு:

அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர் 
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

Wednesday, August 1, 2012

ரமழான் நற்சிந்தனை (உளச்சீர்திருத்தம்)

மனிதனைப் படைத்த அல்லாஹ் அவனது வாழ்வை சீர்படுத்திக் கொள்ளும் பொறுப்பை மனிதனுக்கே வழங்கியுள்ளான். நன்மை, தீமை ஆகிய இரண்டையும் ஒவ்வொரு மனிதனது உள்ளத்திலும் அல்லாஹ் உணர்த்திவைத்துள்ளான். 

நற்காரியங்களால் ஆத்மாவை வளப்படுத்திக்கொள்ளும் மனிதன் வெற்றி பெறும் அதேவேளை தீமைகளால் உள்ளத்தை அழுக்காக்கிக் கொள்பவன் தோல்வியடைகிறான். இந்த வகையில் மனித வாழ்வின் வெற்றிக்கும் ஆரோக்கியமான மாற்றத்திற்கும் உளச்சீர்திருத்தமே பிரதான காரணியாக அமைகிறது.

எனவே தான் அல்லாஹுதஆலா யார் உள்ளத்தை பரிசுத்தப்படுத்திக் கொண்டாரோ அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்றும் அதனை அசுத்தப்படுத்திக் கொண்டவர் தோல்வியடைந்து விட்டார் என்றும் கூறியுள்ளான். உள்ளம் நன்மையால் வளர்க்கப்படும் போது தீமைகள் இயல்பாகவே நீங்கி விடுகின்றன. அந்த உள்ளத்தில் தீமைகளுக்கு இடமே இருக்காது. 

மனிதனுடைய உயரீதியான மாற்றத்திற்கு இஸ்லாம் போதிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. தொழுகை, திக்ர், குர்ஆனுடனான உறவு, நோன்பு போன்ற உயர்ந்த ஆத்மீக செயற்பாடுகளில் ஒருவர் ஈடுபடும் போது அவன் ஆத்மீக ரீதியாக முன்னேறுகிறான். எமக்காக அல்லாஹ்வால் வழங்கப்பட்டிருக்கும் இத்தகைய ஆத்மீக செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு ஆத்மீகத்தை வளப்படுத்திக்கொள்வோமாக.

தொகுப்பு:

அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர் 
ஜாமியா நளீமியா கலாபீடம் – பேருவளை

ரமழான் நற்சிந்தனை (பெறுமதியான பொழுதுகள்)

மனிதன் மிகக்குறுகிய காலமே உலகிலே வாழ்கிறான். அவன் வாழும் பொழுதுகள் அவனது வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. நேரம் தான் வாழ்க்கை. நாட்கள் மிக வேகமாக ஓடிவிடும். வாழ்க்கைக்கு என்றோ ஒரு நாள் முற்றுப்புள்ளி வைக்கப்படும். 

ஒரு புத்திசாலிக்கு எவ்வளவு காலம் தான் வாழ்ந்தேன் என்பதை விட தனக்காக இறைவனால் வழங்கப்பட்ட காலத்தை எவ்வளவு தூரம் சிறந்த முறையில் பயன்படுத்தினேன் என்பதே முக்கியமானது. இத்தகைய வாழ்வினுள் எத்தனையோ சோலிகள், நோய்கள், பிரச்சினைகள், நிகழ்ச்சிகள் இவற்றோடே பொழுதுகள் மிக வேகமாக கழிந்து விடுகின்றன. 

இத்தகைய சிக்கலான சோலிகள் நிறைந்த வாழ்வில் அல்லாஹ் உன்னதமான, பெறுமதியான பொழுதுகளையும் நாட்களையும் தந்துள்ளான். அவற்றை நாம் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதினூடாக வெற்றியடைந்தவர்களாக மாறிவிட முடியும்.

இறைவனால் வழங்கப்பட்;ட மிகப் பெறுமதியான பொழுதுகளைக் கொண்ட மாதம் தான் ரமழான். எமக்கு கிடைத்துள்ள பாக்கியத்தை உச்ச அளவில் பயன்படுத்திக் கொள்வோம். இறைவனுக்காக நோன்பு நோற்று, அதிகம் நற்காரியங்களில் ஈடுபட்டு, தீமைகளிலிருந்து தூரமாகி, இரவு நேர வணக்கங்களில் ஈடுபட்டு பெறுமதியான பொழுதுகளில் உச்ச பயனை அடைந்து கொள்வோம். 

இத்தகைய பொழுதுகள் எமது வாழ்நாளில் மீண்டும் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம். இத்தகைய பொழுதுகளை எமக்காக தந்து அளவில்லா கூலிகளையும் வழங்குவதாக கூறிய அல்லாஹ்வுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். எம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக.

தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர் 
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை