Thursday, August 16, 2012

ரமழான் நற்சிந்தனை (லைலதுல் கத்ர்)


ரமழான் மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்ததொரு இரவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். லைலதுல் கத்ர் அதாவது கத்ருடைய இரவு என அழைக்கப்படும் அவ்விரவில் தான் அல்குர்ஆன் இறக்கப்பட்டது. லைலதுல் கத்ருடைய சிறப்பை பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
'நிச்சயமாக நாம் அல்குர்ஆனை லைலதுல் கத்ரிலே இறக்கிவைத்தோம. லைலதுல் கத்ர் என்றால் என்ன என்பதை உமக்கு யார் அறிவித்தது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாகும். ஜிப்ரீல் (அலை) அவர்களும் மலக்குமார்களும் இறைவனின் கட்டளையின் பேரில் பூரண சாந்தியோடு உலகிற்கு இறங்குவார்கள். அது அதிகாலை உதயம் வரை நீடிக்கும்'. (ஸூறதுல் கத்ர்)
மலக்குமார்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் வருகையால் உலகம் அமைதியடைகிறது. அந்த இரவில் செய்யும் நன்மைகளுக்கு ஏனைய இரவுகளை விடவும் விஷேடமான கூலிகள் காத்திருக்கின்றன.
ரமழானில் ஒரு தினத்தில் காணப்படும் லைலதுல் கத்ர் இரவை அல்குர்ஆனோ ஸூன்னாவோ சரியாக வரையருத்து கூறவில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் அதனை     ரமழான் மாதத்தில் இறுதி பத்தில் தேடிக்கொள்ளுமாறு கூறினார்கள்.
அதிலும் ரமழான் மாதத்தில் இறுதி பத்தில் ஒற்றைப்பட இரவுகளில் தேடிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். லைலதுல் கத்ருடைய பூரண பலன்களை பெற்று இறை திருப்தியை அடைந்துகொள்வதற்காக ரமழான் மாதத்தின் இறுதி பத்தில் ஒற்றை இரவுகளில் சிறந்த வணக்க வழிபாடுகளில் எம்மை ஈடுபடுத்திக்கொள்ள அல்லாஹ் கிருபை செய்வானாக.
தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீம்)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

No comments:

Post a Comment