Friday, August 3, 2012

ரமழான் நற்சிந்தனை (மக்கா வெற்றி)

ரமழான் பல வெற்றிகளையும், சாதனைகளையும் சுமந்து வந்த மாதமாகும். இஸ்லாமிய வரலாற்றின் வீர தீரச் செயற்பாடுகள் நிகழ்த்தப்பட்ட ஒரு மாதமாக ரமழான் திகழ்கிறது. இந்த ரமழான் மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்களது மிகப் பெரும் சாதனைகளுல் ஒன்றாகிய மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. 

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்று எட்டாவது ஆண்டு ரமழான் மாதம் எட்டாவது நாள் இந்த மாபெரும் வெற்றி நிகழ்ந்தது. நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மக்காவில் துவங்கிய இஸ்லாமிய அழைப்புப் பணி அல்லாஹ்வின் அருளினால் பாரிய வெற்றிகளை பத்தொன்பது வருடங்களுக்குள்ளால் சாதித்தது. 

இஸ்லாம் சத்திய மார்க்கம். அதன் தூய செய்தி உலகமக்கள் அனைவருக்கும் சென்றடைய ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த சக்திகள் வரலாற்றில் தோல்வி கண்டுள்ளன. அதேவேளை இஸ்லாம் அதன் வெற்றிகளை சாதிப்பதற்கும் பாரிய சாதனைகளை நிகழ்த்துவதற்கும் மிகப்பெரிய விலையை கொடுத்தமையும் உண்மையே. எனவே நாம் கொண்டாடும் மக்கா வெற்றி பாரிய தியாகங்களைத் தொடர்ந்து ஈட்டப்பட்ட வெற்றியாகும்.

நபி (ஸல்) அவர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த பூமியில் தனது கொள்கைக்கு அங்கீகாரம் கிடைக்காத போது அங்கிருந்து சென்று மதீனா மக்களது பூரண ஒத்துழைப்போடு இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொண்டு மிகவும் சமாதான முறையில் ஈட்டப்பட்ட வெற்றியே மக்கா வெற்றியாகும். இஸ்லாத்தின் தூய செய்தி உலக மக்களை சென்றடைய வழிசெய்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை என்ற உணர்வை இந்த வெற்றி எமக்கு உணர்த்துகிறது.

தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர் 
ஜாமியா நளீமியா கலாபீடம் – பேருவளை

No comments:

Post a Comment