Wednesday, August 1, 2012

ரமழான் நற்சிந்தனை (உளச்சீர்திருத்தம்)

மனிதனைப் படைத்த அல்லாஹ் அவனது வாழ்வை சீர்படுத்திக் கொள்ளும் பொறுப்பை மனிதனுக்கே வழங்கியுள்ளான். நன்மை, தீமை ஆகிய இரண்டையும் ஒவ்வொரு மனிதனது உள்ளத்திலும் அல்லாஹ் உணர்த்திவைத்துள்ளான். 

நற்காரியங்களால் ஆத்மாவை வளப்படுத்திக்கொள்ளும் மனிதன் வெற்றி பெறும் அதேவேளை தீமைகளால் உள்ளத்தை அழுக்காக்கிக் கொள்பவன் தோல்வியடைகிறான். இந்த வகையில் மனித வாழ்வின் வெற்றிக்கும் ஆரோக்கியமான மாற்றத்திற்கும் உளச்சீர்திருத்தமே பிரதான காரணியாக அமைகிறது.

எனவே தான் அல்லாஹுதஆலா யார் உள்ளத்தை பரிசுத்தப்படுத்திக் கொண்டாரோ அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்றும் அதனை அசுத்தப்படுத்திக் கொண்டவர் தோல்வியடைந்து விட்டார் என்றும் கூறியுள்ளான். உள்ளம் நன்மையால் வளர்க்கப்படும் போது தீமைகள் இயல்பாகவே நீங்கி விடுகின்றன. அந்த உள்ளத்தில் தீமைகளுக்கு இடமே இருக்காது. 

மனிதனுடைய உயரீதியான மாற்றத்திற்கு இஸ்லாம் போதிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. தொழுகை, திக்ர், குர்ஆனுடனான உறவு, நோன்பு போன்ற உயர்ந்த ஆத்மீக செயற்பாடுகளில் ஒருவர் ஈடுபடும் போது அவன் ஆத்மீக ரீதியாக முன்னேறுகிறான். எமக்காக அல்லாஹ்வால் வழங்கப்பட்டிருக்கும் இத்தகைய ஆத்மீக செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு ஆத்மீகத்தை வளப்படுத்திக்கொள்வோமாக.

தொகுப்பு:

அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர் 
ஜாமியா நளீமியா கலாபீடம் – பேருவளை

No comments:

Post a Comment