Tuesday, August 7, 2012

ரமழான் நற்சிந்தனை (அல் குர்ஆனை புரிந்து கொள்வோம்)

அல் குர்ஆன் மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையில் உறவை ஏற்படுத்துகிறது. அல் குர்ஆனுக்கூடாக ஒரு விசுவாசி உயர்ந்த ஆத்மீக தரத்தை அடைகிறான். அவனது சிந்தனைகளையும், எண்ணங்களையும் அது விரிவுபடுத்துகிறது. உலகின் அற்ப நோக்கங்களிலிருந்து அவனை விடுவித்து உயர்ந்த இலக்குகளுக்காக அவனை செயல்பட வைக்கிறது. 

அவனது ஆளுமை பண்புகளை விருத்தியடையச் செய்கிறது. இத்தகைய விளைவுகளை உண்டுபண்ணும் குர்ஆனுடனான எமது உறவு மிகவும் பலமானதாக அமைய வேண்டும்.அல் குர்ஆனை ஓதுவதோடு மாத்திரம் அதனூடான தொடர்பை நாம் நிறுத்திக் கொள்ளக் கூடாது. அல் குர்ஆனை ஓதுவது மிகப்பெரும் இபாதத். 

அல்லாஹ்விடத்தில் ஏராளமான நன்மைகளைப் பெற்றுத் தரும் செயலாக அல் குர்ஆனை ஓதுதல் காணப்படுகிறது. எனினும் குர்ஆனை ஓதுவதோடு அதனை புரிந்து கொள்ளவும் நாம் முனைய வேண்டும். குர்ஆனை அல்லாஹ் இறக்கியதன் நோக்கமே மனிதன் அதிலிருந்து வழிகாட்டல்களைப் பெறுவதாகும். அதன் பொருளைப் புரிந்து கொள்ளாமல், அதன் கருத்துக்களை விளங்காமல் எப்படி நாம் வழிகாட்டல்களை பெறமுடியும்.

குர்ஆனுக்கூடாக நாம் எப்படி தாக்கமடைய முடியும். குர்ஆன் கூறும் கருத்துக்களை சிந்திக்காது ஓதுவோரை குர்ஆன் மிகக் கடுமையாக கண்டிக்கிறது. எனவே இறைவனின் விருப்பமாகிய குர்ஆனை புரிந்து, வாழ்வில் செயற்படுத்தும் விசுவாசிகளாக எம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். எமது சக்திக்கு உட்பட்ட வகையில் குர்ஆனைப் புரிந்துகொள்ள முனைவோமாக.

தொகுப்பு:

அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர் 
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை


No comments:

Post a Comment