Showing posts with label ரமழான் நற்சிந்தனை. Show all posts
Showing posts with label ரமழான் நற்சிந்தனை. Show all posts

Thursday, August 16, 2012

ரமழான் நற்சிந்தனை (லைலதுல் கத்ர்)


ரமழான் மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்ததொரு இரவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். லைலதுல் கத்ர் அதாவது கத்ருடைய இரவு என அழைக்கப்படும் அவ்விரவில் தான் அல்குர்ஆன் இறக்கப்பட்டது. லைலதுல் கத்ருடைய சிறப்பை பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
'நிச்சயமாக நாம் அல்குர்ஆனை லைலதுல் கத்ரிலே இறக்கிவைத்தோம. லைலதுல் கத்ர் என்றால் என்ன என்பதை உமக்கு யார் அறிவித்தது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாகும். ஜிப்ரீல் (அலை) அவர்களும் மலக்குமார்களும் இறைவனின் கட்டளையின் பேரில் பூரண சாந்தியோடு உலகிற்கு இறங்குவார்கள். அது அதிகாலை உதயம் வரை நீடிக்கும்'. (ஸூறதுல் கத்ர்)
மலக்குமார்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் வருகையால் உலகம் அமைதியடைகிறது. அந்த இரவில் செய்யும் நன்மைகளுக்கு ஏனைய இரவுகளை விடவும் விஷேடமான கூலிகள் காத்திருக்கின்றன.
ரமழானில் ஒரு தினத்தில் காணப்படும் லைலதுல் கத்ர் இரவை அல்குர்ஆனோ ஸூன்னாவோ சரியாக வரையருத்து கூறவில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் அதனை     ரமழான் மாதத்தில் இறுதி பத்தில் தேடிக்கொள்ளுமாறு கூறினார்கள்.
அதிலும் ரமழான் மாதத்தில் இறுதி பத்தில் ஒற்றைப்பட இரவுகளில் தேடிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். லைலதுல் கத்ருடைய பூரண பலன்களை பெற்று இறை திருப்தியை அடைந்துகொள்வதற்காக ரமழான் மாதத்தின் இறுதி பத்தில் ஒற்றை இரவுகளில் சிறந்த வணக்க வழிபாடுகளில் எம்மை ஈடுபடுத்திக்கொள்ள அல்லாஹ் கிருபை செய்வானாக.
தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீம்)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

Monday, August 13, 2012

ரமழான் நற்சிந்தனை (பயிற்சி தொடரட்டும்)


அருள்மிகு ரமழானின் இறுதி வேளையை அடைந்துவிட்டோம். இறைவனுடனான இறுக்கமான உறவை  பேண பல முயற்சிகளை மேற்கொண்டோம். இறை வேதமாகிய அல்குர்ஆனுடன் நெருக்கமான உறவைப் பேணினோம்.
அல்குர்ஆனை அதிகமாக ஓதினோம். பிறர் ஓதுவதை செவிமடுத்தோம். அதன் கருத்துக்களை ஓரளவு புரிந்துகொள்ள முயன்றோம். அல்லாஹ்வின் வார்த்தையோடு தொடர்புபட்டு அவனது நெருக்கத்தை ஏற்படுத்தினோம்.
பர்ளான தொழுகைகளை முடிந்தளவு கூட்டாக நிறைவேற்றினோம். முன் பின் ஸூன்னத்துக்களை பேணி தொழுதோம். இரவு நேர வணக்கங்களில் ஈடுபட்டோம். ஏழை எளியவர்களின் கஷ்டங்களிலே பங்கெடுத்தோம். தான தர்மங்களை வாரி வழங்கினோம். இறைமன்னிப்பை பெற்றுக்கொள்வதற்காக பாவமன்னிப்புத் தேடினோம்.
ரமழானின் பூரண பயனை பெற்றுக்கொள்வதற்காக நாம் பல முயற்சிகளை எடுத்தோம். மனோ இச்சைகளுக்கு மாற்றமாக பாவ செயல்களிலிருந்து தூரமாகினோம். இப்படியாக ஒரு மாத காலம் ரமழானில் மிக சிறந்த பயிற்சியை பெற்றுக்கொண்டோம்.
இந்த பயிற்சிகளும், உயர்ந்த ஆத்மீக செயற்பாடுகளும், சிறந்த பண்பாடுகளும் ரமழானுக்கு பின்னரும் எம்மிலே பிரதிபலிக்கட்டும். ரமழானின் தாக்கம் முழு வாழ்வாழ்விலும் பாதிப்புச் செலுத்தட்டும். நோன்பின் பின்னரான வாழ்வுக்காக நாம் தயாராகுவோம். இறைவன் எமக்கு கிருபை செய்வானாக.
தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீம்)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

Friday, August 10, 2012

ரமழான் நற்சிந்தனை (நோன்பு மனித நலனாகும்)

மனித சமுதாயத்தில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கோடு நோன்பு நோற்கும் வழமை எல்லா சமுதாயங்கள் மீதும் விதியாக்கப்பட்டுள்ளது. இத்தகைய தொன்மை வாய்ந்த வணக்கம் நபி (ஸல்) அவர்களை விசுவாசித்து வாழும் விசுவாசிகள் மீதும் அல்லாஹ்வினால் விதியாக்கப்பட்டுள்ளது.

நோன்பு என்பது வணக்கத்தின் பெயர். ரமழான் என்பது மாதத்தின் பெயர். ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதத்தை அடையும் போது முஸ்லிம்கள் நோன்பு நோற்பது கடமையாகும்.  ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை உண்ணல், பருகல், அனுபவித்தல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்து பாவ காரியங்களிலிருந்து விலகி, நன்மையான செயற்பாடுகளில் ஈடுபடுவதையே நோன்பு என்பது குறிக்கின்றது.

ரமழான் மாதம் முழுவதும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது மிக நீண்டதொரு பயிற்சி அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ளது. நோன்பு எனும் கடமை மனிதர்களை வருத்துவதற்காக கடமையாக்கப்பட்டதொன்றல்ல. உடம்பையும், மனித ஆசைகளையும் கட்டுப்படுத்தி மனிதனை கஷ்டத்துக்கு உட்படுத்துவது நோன்பின் நோக்கமுமல்ல. அத்துடன் நோன்பு உண்ணாவிரதம் போன்ற செயற்பாடும் அல்ல.

மாற்றமாக மனித நலனை கருத்திற்கொண்டு மனிதனை படைத்து, அவனது சகல விடயங்களையும் அறிந்த இரட்சகனால் விதியாக்கப்பட்ட உயர்ந்த ஆத்மீக பயிற்சியாகும். அற்பமான மனோ இச்சைகளுக்கு கட்டுப்படும் மனிதனை உயர்ந்த இலக்குகளோடு வாழும் மனிதனாக வாழவைப்பதே நோன்பின் நோக்கமாகும். 

பாவங்களுக்கும் தீமைகளுக்கும் முன்னால் எப்படி தனது மனதை கட்டுப்படுத்தி வாழ வேண்டும் என்ற பயிற்சியை நோன்பு அவனுக்கு வழங்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மனித விருப்பங்களை விட படைத்த அல்லாஹ்வின் விருப்பங்களுக்கு அடி பணியும் மனோநிலையை உண்டுபண்ணுகிறது. 

உலக மற்றும் மறுமை பாக்கியங்களை நோன்பு பெற்றுத்தருகிறது. இத்தகைய மனித நலன்களை ஏற்படுத்தி தரும் நோன்பை நோற்று பயனடைவோமாக.

தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர் 
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

Tuesday, August 7, 2012

ரமழான் நற்சிந்தனை (அல் குர்ஆனை புரிந்து கொள்வோம்)

அல் குர்ஆன் மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையில் உறவை ஏற்படுத்துகிறது. அல் குர்ஆனுக்கூடாக ஒரு விசுவாசி உயர்ந்த ஆத்மீக தரத்தை அடைகிறான். அவனது சிந்தனைகளையும், எண்ணங்களையும் அது விரிவுபடுத்துகிறது. உலகின் அற்ப நோக்கங்களிலிருந்து அவனை விடுவித்து உயர்ந்த இலக்குகளுக்காக அவனை செயல்பட வைக்கிறது. 

அவனது ஆளுமை பண்புகளை விருத்தியடையச் செய்கிறது. இத்தகைய விளைவுகளை உண்டுபண்ணும் குர்ஆனுடனான எமது உறவு மிகவும் பலமானதாக அமைய வேண்டும்.அல் குர்ஆனை ஓதுவதோடு மாத்திரம் அதனூடான தொடர்பை நாம் நிறுத்திக் கொள்ளக் கூடாது. அல் குர்ஆனை ஓதுவது மிகப்பெரும் இபாதத். 

அல்லாஹ்விடத்தில் ஏராளமான நன்மைகளைப் பெற்றுத் தரும் செயலாக அல் குர்ஆனை ஓதுதல் காணப்படுகிறது. எனினும் குர்ஆனை ஓதுவதோடு அதனை புரிந்து கொள்ளவும் நாம் முனைய வேண்டும். குர்ஆனை அல்லாஹ் இறக்கியதன் நோக்கமே மனிதன் அதிலிருந்து வழிகாட்டல்களைப் பெறுவதாகும். அதன் பொருளைப் புரிந்து கொள்ளாமல், அதன் கருத்துக்களை விளங்காமல் எப்படி நாம் வழிகாட்டல்களை பெறமுடியும்.

குர்ஆனுக்கூடாக நாம் எப்படி தாக்கமடைய முடியும். குர்ஆன் கூறும் கருத்துக்களை சிந்திக்காது ஓதுவோரை குர்ஆன் மிகக் கடுமையாக கண்டிக்கிறது. எனவே இறைவனின் விருப்பமாகிய குர்ஆனை புரிந்து, வாழ்வில் செயற்படுத்தும் விசுவாசிகளாக எம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். எமது சக்திக்கு உட்பட்ட வகையில் குர்ஆனைப் புரிந்துகொள்ள முனைவோமாக.

தொகுப்பு:

அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர் 
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை