Friday, August 10, 2012

ரமழான் நற்சிந்தனை (நோன்பு மனித நலனாகும்)

மனித சமுதாயத்தில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கோடு நோன்பு நோற்கும் வழமை எல்லா சமுதாயங்கள் மீதும் விதியாக்கப்பட்டுள்ளது. இத்தகைய தொன்மை வாய்ந்த வணக்கம் நபி (ஸல்) அவர்களை விசுவாசித்து வாழும் விசுவாசிகள் மீதும் அல்லாஹ்வினால் விதியாக்கப்பட்டுள்ளது.

நோன்பு என்பது வணக்கத்தின் பெயர். ரமழான் என்பது மாதத்தின் பெயர். ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதத்தை அடையும் போது முஸ்லிம்கள் நோன்பு நோற்பது கடமையாகும்.  ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை உண்ணல், பருகல், அனுபவித்தல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்து பாவ காரியங்களிலிருந்து விலகி, நன்மையான செயற்பாடுகளில் ஈடுபடுவதையே நோன்பு என்பது குறிக்கின்றது.

ரமழான் மாதம் முழுவதும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது மிக நீண்டதொரு பயிற்சி அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ளது. நோன்பு எனும் கடமை மனிதர்களை வருத்துவதற்காக கடமையாக்கப்பட்டதொன்றல்ல. உடம்பையும், மனித ஆசைகளையும் கட்டுப்படுத்தி மனிதனை கஷ்டத்துக்கு உட்படுத்துவது நோன்பின் நோக்கமுமல்ல. அத்துடன் நோன்பு உண்ணாவிரதம் போன்ற செயற்பாடும் அல்ல.

மாற்றமாக மனித நலனை கருத்திற்கொண்டு மனிதனை படைத்து, அவனது சகல விடயங்களையும் அறிந்த இரட்சகனால் விதியாக்கப்பட்ட உயர்ந்த ஆத்மீக பயிற்சியாகும். அற்பமான மனோ இச்சைகளுக்கு கட்டுப்படும் மனிதனை உயர்ந்த இலக்குகளோடு வாழும் மனிதனாக வாழவைப்பதே நோன்பின் நோக்கமாகும். 

பாவங்களுக்கும் தீமைகளுக்கும் முன்னால் எப்படி தனது மனதை கட்டுப்படுத்தி வாழ வேண்டும் என்ற பயிற்சியை நோன்பு அவனுக்கு வழங்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மனித விருப்பங்களை விட படைத்த அல்லாஹ்வின் விருப்பங்களுக்கு அடி பணியும் மனோநிலையை உண்டுபண்ணுகிறது. 

உலக மற்றும் மறுமை பாக்கியங்களை நோன்பு பெற்றுத்தருகிறது. இத்தகைய மனித நலன்களை ஏற்படுத்தி தரும் நோன்பை நோற்று பயனடைவோமாக.

தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர் 
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

No comments:

Post a Comment