Thursday, August 2, 2012

ரமழான் நற்சிந்தனை (கியாமுல்லைல் - இரவுத் தொழுகை)

ரமழான் மாதத்தின் பகல் வேளைகளில் நோன்பு நோற்பதற்கூடாகவும் இரவு வேளைகளில் நின்று வணங்குவதற்கூடாகவும் இறைவனை நெருங்க வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. இரவுத் தொழுகை நபி (ஸல்) அவர்களின் மிக முக்கியமான வழி முறையாகும். விஷேடமாக இத்தொழுகையை ரமழானில் நபி (ஸல்) அவர்களும் அவரது தோழர்களும் கடைபிடித்து வந்தனர். 

மிக நீண்ட நேரம் அல் - குர்ஆன் வசனங்களை ஓதி இத்தொழுகையை நிறைவேற்றினார்கள். ரமழான் எனும் போது பிரிக்க முடியாத மிக முக்கிய அங்கமாக கியாமுல்லைல் எனப்படும் இரவுத் தொழுகை காணப்படுகிறது.  "ரமழான் மாதத்தில் தூய்மையான நோக்கத்தோடு யார் இரவு நேரங்களில் நின்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் திருப்தியொன்றை மாத்திரம் எதிர்பார்த்து இரவில் விழுத்திருந்து இத்தொழுகையை நிறைவேற்றுபவர்களின் குற்றங்களை மன்னித்து மேலான பாக்கியங்களை அல்லாஹ் வழங்குகிறான். "மக்களெல்லோரும் தூங்கும் போது நீங்கள் எழுந்து அல்லாஹ்வை வணங்குவதன் ஊடாக நீங்கள் பாதுகாப்பாக சுவர்க்கம் நுழைய முடியும்" என  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இரவுத் தொழுகை உள்ளத்திலே ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரவு நேரத்தில் உலகம் அமைதியடைந்திருக்கும் நிலையில் இறைவனை நினைத்து தொழும் போது ஏற்படும் மன அமைதியும், நிம்மதியும், சிறந்த உளத்தாக்கங்களும் உயர்ந்த மனிதனாக எம்மை வாழவைக்கும். இத்தகைய பாக்கியங்களைக் கொண்ட இரவுத் தொழுகையை விடாது ரமழானில் நிறைவேற்ற அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக.

தொகுப்பு:

அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர் 
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

No comments:

Post a Comment