Wednesday, August 1, 2012

ரமழான் நற்சிந்தனை (பெறுமதியான பொழுதுகள்)

மனிதன் மிகக்குறுகிய காலமே உலகிலே வாழ்கிறான். அவன் வாழும் பொழுதுகள் அவனது வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. நேரம் தான் வாழ்க்கை. நாட்கள் மிக வேகமாக ஓடிவிடும். வாழ்க்கைக்கு என்றோ ஒரு நாள் முற்றுப்புள்ளி வைக்கப்படும். 

ஒரு புத்திசாலிக்கு எவ்வளவு காலம் தான் வாழ்ந்தேன் என்பதை விட தனக்காக இறைவனால் வழங்கப்பட்ட காலத்தை எவ்வளவு தூரம் சிறந்த முறையில் பயன்படுத்தினேன் என்பதே முக்கியமானது. இத்தகைய வாழ்வினுள் எத்தனையோ சோலிகள், நோய்கள், பிரச்சினைகள், நிகழ்ச்சிகள் இவற்றோடே பொழுதுகள் மிக வேகமாக கழிந்து விடுகின்றன. 

இத்தகைய சிக்கலான சோலிகள் நிறைந்த வாழ்வில் அல்லாஹ் உன்னதமான, பெறுமதியான பொழுதுகளையும் நாட்களையும் தந்துள்ளான். அவற்றை நாம் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதினூடாக வெற்றியடைந்தவர்களாக மாறிவிட முடியும்.

இறைவனால் வழங்கப்பட்;ட மிகப் பெறுமதியான பொழுதுகளைக் கொண்ட மாதம் தான் ரமழான். எமக்கு கிடைத்துள்ள பாக்கியத்தை உச்ச அளவில் பயன்படுத்திக் கொள்வோம். இறைவனுக்காக நோன்பு நோற்று, அதிகம் நற்காரியங்களில் ஈடுபட்டு, தீமைகளிலிருந்து தூரமாகி, இரவு நேர வணக்கங்களில் ஈடுபட்டு பெறுமதியான பொழுதுகளில் உச்ச பயனை அடைந்து கொள்வோம். 

இத்தகைய பொழுதுகள் எமது வாழ்நாளில் மீண்டும் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம். இத்தகைய பொழுதுகளை எமக்காக தந்து அளவில்லா கூலிகளையும் வழங்குவதாக கூறிய அல்லாஹ்வுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். எம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக.

தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர் 
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

No comments:

Post a Comment