(அஷ்-ஷேய்க் யூ.கே. அப்துர் ரஹீம் (நளீமி))
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நடைமுறைப்படுத்திவரும் ஹலால் சான்றிதழ் வழங்கும் விடயம் வேண்டுமென்றே சில இனவாதக் குழுக்களால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு ஓர் இனத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பாராளுமன்றத்திலும் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் அளவுக்கு இது சென்றுவிட்டிருக்கிறது.
இந்நிலையில் பெரும்பான்மையின சகோதர மக்களுக்கு மத்தியில் பரப்பப்பட்டுவரும் வீண் சந்தேகங்களைப் போக்கும் வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அண்மையில் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டிலும் அதன் உதவித் தலைவர் மௌலவி எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் விடிவெள்ளிக்கு வழங்கியிருந்த செவ்வியிலும் உலமா சபையானது ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை மீள்பரிசீலனை செய்ய அல்லது விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளது என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் பொதுபலசேனா போன்ற ஒரு சில இனத்துவேசக் குழுக்களின் அழுத்தங்களுக்குட்பட்டு விட்டதாகப் பாசாங்கு காட்டி ஹலால் சான்றிதழ் வழங்கும் விடயத்தில் தலையீடு செய்து அதன் விளைவாக சான்றிதழ் வழங்கும் நடைமுறையை விட்டுக் கொடுக்க வேண்டிய ஒரு நிலைப்பாடு ஜம்இய்யதுல் உலமாவுக்கு ஏற்படுமானால் அது மிகவும் கவலைக்குரிய ஒரு நிலையாகும். அத்தலையீடு எமது சமய உரிமையில் ஏற்படுத்தப்படும் அனாவசியத் தலையீடாகவே கருதப்பட வேண்டும்.
முஸ்லிம்களாகிய எம்மைப் பொறுத்தவரை எமது நடைமுறை வாழ்க்கையில் ஹலால்(அனுமதிக்கப்பட்டவை) எவை, ஹராம் (அனுமதிக்கப்படாதவை) எவையெனப் பார்த்து ஹராத்தைத் தவிர்ந்து வாழுவது எமது சன்மார்க்கக் கடமையாகும். திருக்குர்ஆன் இது பற்றிப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளது. உதாரணமாக:
'விசுவாசிகளே, உங்களுக்கு நாம் அளித்தவற்றிலிருந்து நல்லவற்றையே உண்ணுங்கள். அவனுக்கு மாத்திரமே நீங்கள் கட்டுப்படுவதாக இருந்தால் அல்லாஹ்வுக்கு நன்றியும் செலுத்துங்கள்'. (அல்-குர்ஆன் 2:172)
இங்கு நல்லவை என குர்ஆன் குறிப்பிடுவது ஹலாலானவற்றையாகும். எமது நம்பிக்கைப்படி எமது மார்க்கம் எவற்றையெல்லாம் ஹலாலாக்கியுள்ளதோ அவையெல்லாம் நல்லவைகளேளூ ஆரோக்கியமானவைகளே. எவற்றையெல்லாம் ஹராம் எனத் தடுத்துள்ளதோ அவையெல்லாம் எமது உடலுக்கோ,உயிருக்கோ,அறிவுக்கோ, மார்க்கத்துக்கோ, மானத்துக்கோ தீங்கு விளைவிப்பனவே. அத்தீங்கு எவையென மனிதனின் குறுகிய அறிவெல்லைக்கு இன்று வரை புலப்படாவிட்டாலும் சரியே!
எனவே, நாம் சாப்பிடும் பொருட்கள், பாவிக்கும் பொருட்கள் எல்லாவற்றிலுமே அவை ஹலாலானவைகளா எனப்பார்க்க வேண்டியது எமது சன்மார்க்கக் கடமை என்ற வகையில் அது எமது சமய உரிமையாகும். இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின்படி அந்த சமய உரிமையை அனுபவிப்பதற்கு எமக்கு பரிபூரண சுதந்திரமும் உரிமையும் உண்டு. இதனை எமக்குக் கிடைக்காமல் செய்ய எவருக்கும் உரிமை கிடையாது.
இன்று ஏராளமான உணவுப் பண்டங்கள்,பாவனைப் பொருட்கள் சந்தைக்கு வருகின்றன. இவற்றுள் சில இங்கு உற்பத்தியாகின்றன. வேறு சில இறக்குமதியாகின்றன. இவையனைத்திலும் ஹராமான சேர்வைகளின்றி தயாரிக்கப்பட்டவை எவையென அறிந்து கொள்வதற்கு எமக்குள்ள ஒரே ஒரு இலகுவான வழி ஜம்இய்யதுல் உலமாவினால் வழங்கப்படுகின்ற ஹலால் இலச்சினையைப் புரட்டிப் பார்ப்பதுதான். அந்த இலச்சினையை ஜம்இய்யதுல் உலமா உரிய பரிசோதனைகளுக்குப் பின்னரே வழங்கியுள்ளது என நாங்கள் நம்புகிறோம்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஹலால் சான்றிதழ் பிரச்சினை பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது 'இதனை ஜம்இய்யதுல் உலமா செய்வதுதான் பிரச்சினை. அரசாங்கம் இதனைப் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டும்' எனத் தீர்வு கூறியிருந்தார். தலைவலிக்குத் தலையணையை மாற்றுவது போல் உள்ளது இவரது யோசனை. அவ்வாறு அரசாங்கம் பொறுப்பெடுத்தால் வேறு பல பிரச்சினைகள் உருவெடுக்கும். ஊழல்களும் மோசடிகளும் இடம்பெறுவதற்கும் வீண் விளையாட்டாக இது மாறிப் போவதற்கும் பெருமளவில் இடமுண்டு. எனவே, ஜம்இய்யதுல் உலமாவே தொடர்ந்து இப் பணியைப் புரிய வேண்டும். வேறு எந்தச் சபையோ அல்லது குழுவோ இதனைச் சரிவரச் செய்யும் என எம்மால் நம்ப முடியாது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பாராளுமன்றத்தினால் கூட்டிணைக்கப்பட்ட சட்டபூர்வமான ஓர் அமைப்பு. இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தமான பத்வாக்களை(மார்க்கத் தீர்ப்புக்களை) வழங்குவதற்கு அதற்கு சட்ட ரீதியான அதிகாரம்; உள்ளது. ஹலால் - ஹராம் சம்பந்தமாக தெளிவு வழங்குவது என்பது பத்வா வழங்குவதுதான். எனவே, சட்டரீதியான இந்த உரிமையை அது கையிழக்கக் கூடாது. அவ்வாறு இழந்தோமானால் நிச்சயமாக இது ஹலால் சான்றிதழோடு மட்டும் நின்று விடப் போவதில்லை. நாம் தற்போது அனுபவித்து வரும் மத ரீதியான உரிமைகள் பலவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சங்கிலிக் கோர்வை போல் பேரினவாதிகளின் கைகளில் இழந்து விட வேண்டிய அவல நிலையே ஏற்படும். எனவே, இந்த விடயத்தில் தீர்க்கமான ஒரு முடிவுடன் நாம் இருத்தல் வேண்டும்.
ஹலால் சான்றிதழ் நடைமுறையால் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பதும் பொருளாதாரம் வளர்வதும் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி தரும் விடயங்கள். ஆனால் இந்த நாட்டு நலன்களெல்லாம் இனவாதக் குழுக்களின் குரோதக் கண்களுக்கு முன்னால் தூசுகளாகிப் போனமைதான் புதுமையான விடயம். மிகப் பலமுள்ள அரசாங்கம் எனக் கூறி மார்பு தட்டிக் கொள்ளும் இந்த அரசாங்கமோ சிறு சிறு குழுக்களின் சலசலப்புகளைக் கண்டு பயப்படுவதாகப் பாசாங்கு செய்து கொண்டு அக் குழுக்களின் இனவாதச் செயற்பாடுகளைத் தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருக்குமாயின் இனத்துவேசத் தீயில் இந்;த நாடு பற்றியெரிந்து சாம்பராகிப் போகும் நாள் வெகு தூரத்திலில்லை என்பது மட்டும் நிச்சயம்.
எமது சமூகத்திலுள்ள சிலரின் மனநிலை எப்படியிருக்கிறது என்றால் இனவாதிகள் எதனைத்தான் எமக்கெதிரான கோஷமாக எழுப்பினாலும் அவற்றை அப்படியே நாம் உள்வாங்கிக் கொண்டு நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒவ்வொன்றாக விட்டுக் கொடுக்க வேண்டும். அல்லாது போனால் அவர்கள் எம்மை அழித்து விடுவார்கள்ள. நாம் என்ன செய்வது? நாம் தான் சிறுபான்மையாயிற்றே! என்ற தோரணையில் இவர்கள் சிந்திக்கிறார்கள். இத்தகையோர் எமது கல்விமான்களிலும் இருக்கிறார்கள். அரசியல்வாதிகளிலும் இருக்கிறார்கள். இந்த சிந்தனை முற்றிலும் பிழையானதாகும். எமது கையாலாகாத்தனம், அரசியல் வங்குரோத்துத்தனம் என்பவற்றை மறைப்பதற்காக இவ்வாறு சிந்திப்பதை விட்டுவிட வேண்டும். அடிமைத்துவ சிந்தனைதான் ஒரு சமூகம் தன் தனித்துவத்தை இழப்பதற்கு எடுத்துவைக்கும் முதற்காலடி என்பதை இத்தகையோர் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு பேரினவாதம் ஒரு விடயத்துடன் மாத்திரம் திருப்திப்பட்டு விடப்போவதில்லை. இன்று ஹலால் இலச்சினை என்பார்கள் நாளை கொழும்பில் அதிகமான பள்ளிகள் இருக்கின்றன. ஆகவே சிலதை உடைக்க வேண்டும் என்பார்கள். இவற்றையெல்லாம் நாம் செயற்படுத்த முனைந்தால் எமது நிலைதான் என்னாவது? எனவே, எமது தனித்துவங்களை விட்டுக் கொடுத்து வாழ்வது பற்றி இங்கு நாம் சிந்திக்கக் கூடாது.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எம்மிடமுள்ள ஒரேயொரு ஆயுதம் எமது ஒற்றுமைதான். எமது அரசியல் பலம், அறிவுப்பலம், பணபலம் மூன்றும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய காலகட்டம் இது என்பதை உணர்ந்து எமது சுயநலங்களையும் குடுமிப் பிடிச் சண்டைகளையும் விட்டொழித்து விட்டு தூர நோக்குடன் சிந்தித்துச் செயற்படாவிட்டால் நாளைய இலங்கை முஸ்லிம்களின் வரலாறு எம்மை மன்னிக்கவே மாட்டாது.
No comments:
Post a Comment