- நண்பனின் மனைவியை அடைவதற்காக நண்பனை கொலை செய்தவன் கைது.
- கள்ளக் காதலுக்காக பெற்ற பிள்ளையை வெட்டி ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்த தாய்!
- ஆண் நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்து பிறந்த நாள் கொண்டாடிய பெண் கற்பழித்துக் கொலை.
- தாய் மகன் கொலை, நள்ளிரவில் ஆண் நண்பர்களுடன் பெண் மணிக்கனக்கில் பேசியது அம்பலம்.
நாள் தோறும் நாளிதழ் திறந்தால் குறைந்த பட்சம் நாலு செய்திகள் இப்படி நம் கண்களை கவ்விக்கொள்ளும். பெரும்பாலான செய்திகளில் காணப்படுவது என்ன? முறையற்ற உறவும், கூடா நட்பும் தான் இவற்றின் மூல காரணங்கள். அருவருக்கத்தக்க விதத்தில் உறவுகளை வளர்த்துக் கொண்டு பின் அதிலிருந்து வெளிவரமுடியாமல் திண்டாடி, காமமாய்க் கசிந்து கோபமாய் மாறி கொலையில் முடிந்து செய்தித்தாளில் புகைப்படமாகி ஊர்வாய்க்கு அவலாய் முடியும் அவலம் வேறெங்கும் இல்லை. நம் தமிழகத்தில் தான். கண்ணகிக்கு சிலை வைக்கவில்லையென்றால் உயிரையும் கொடுப்பான் தமிழன் என்று மார்தட்டி கற்புக்கரசி சிலைக்காக போராட்டமெல்லாம் நடத்தினார்களே அதே தமிழகத்தில் தான் இத்தனை கேவலங்களும்.
கலாச்சாரத்தின் பிறப்பிடமான நமது நாட்டின் மனித உறவுகள் கட்டற்ற முறையில் முறையற்ற வகையில் தவறான பாதையில் போகிறதே, யார் காரணம்? ஆண்களா இல்லை ஆண்களைக் கவரும் பெண்களா? இருபாலரும் ஒரு சேர வழிதவறிச் செல்ல காரணம் என்ன? சமூகமே அப்படித்தான் இருக்கிறது அதனால் தனிமனிதர்கள் இப்படி மாறிவிட்டார்கள் எனலாமா? இல்லை இல்லை தனிமனிதர்களின் மாற்றங்கள் இப்போது சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டுமா?
கலாச்சாரத்தை அடியோடு ஆட்டம் காண வைக்கும் இது போன்ற தவறான நடத்தைகளுக்கெல்லாம் மூலக்காரணம் நாகரீகம் என்ற பெயரால் நம் மக்கள் வேறு பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதே. கலாச்சாரம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதிலேயே பலருக்குத் தெளிவிருப்பதாகத் தோன்றவில்லை. கலாச்சாரம் என்றால் இந்து மத அடையாளங்களென்றும், அவ்வாறான இந்து மத அடையாளங்கள் எல்லாம் நம்பவேண்டிய அவசியம் இல்லாத பழம்பஞ்சாங்க விஷயம் அல்லது மூட நம்பிக்கை என்றும் பலருக்கு போதிக்கப் பட்டிருக்கிறது, தொடர்ந்து போதிக்கப்பட்டும் வருகிறது.
கலாச்சாரம் என்பது சமூகத்தை நல்வழியில் கொண்டுபோக உதவும் ஒரு வழிகாட்டும் முறையே ஆகும். வாழ்ந்து காட்டி வழிகாட்டும் முறை என்றால் மிகையில்லை. குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம். சமூகம் என்பது ஒரு பெரிய குடும்பம். தனி மனிதர்கள் குடும்பத்தில் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதுவே சமூக விளைவாகப் பரவும். சமூகத்தில் பரவும் விளைவுகள் யாவும் ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கும். ஒன்றையொன்று பின்னிக்கொண்டிருக்கும் சமூகச் சங்கிலிக்குள்ளேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறான வாழ்க்கையில் மொத்த மனித கூட்டத்தையும் சரியான பாதைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவே மனிதன் என்பவன் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகளின் படி வழிவழியாக மக்கள் வாழ்வதையே கலாச்சாரம் என்றழைக்கிறோம்.
ஆதி மனிதன் உணர்ச்சிகளை முறைப்படுத்தி முறையாக வாழ்வதற்கு சரியான வழிதெரியாமல் மனம் போன போக்கில் வாழ்ந்து முட்டி மோதி துன்பங்களை அனுபவித்து போதும் போதும் என்று ஆகி, இந்தப்பாதை சரியில்லை இனிமேல் துன்பமின்றி வாழ இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு சரியான பாதையை வகுத்து, அதற்கான கட்டுப்பாட்டு முறைகளை உண்டாக்கி அதன் படி வாழ்ந்து நிம்மதி அடைந்தான். அவ்வாறு தனக்கு நிம்மதியையும் கொடுத்து மகிழ்ச்சியையும் அதிகரித்த நல்ல வழிமுறைகளை தங்களது சந்ததியினருக்கும் சொல்லிக் கொடுத்தான். அவற்றைப் பின் வரும் சந்ததியினரும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப் பாதை வழியாகவே பெரும் சமூகத்தை வழிநடத்தினான். அவ்வாறு மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ பெரியோர்களால் சொல்லிக்கொடுக்கப்பட்டு வழிவழியாகப் பின்பற்றப்படும் வாழ்க்கை முறையே கலாச்சாரம் என்றழைகப்படுகிறது.
இப்படி நம் தாத்தா சொல்ல அப்பாவும் அப்பா சொல்ல நாமும் நாம் சொல்ல நமது பிள்ளைகளும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழும் பொழுது, துன்பங்களை சந்தித்துத் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லாமல் துன்பங்களை தவிர்த்து வாழ கற்றுக்கொள்கிறோம். இந்த வழி தவறு இந்த வழி சரி என்று முதலிலேயே சொல்லப்பட்டு விடுவதால் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்ததே தெரியாமல் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து சென்று விடுவோம். இப்படித்தான் கலாச்சாரம் காலம் காலமாக நம்மை வழிநடத்தி வருகிறது.
திருமணம் நமது கலாச்சாரத்தின் ஆணிவேர். கூட்டமாக மனிதன் வாழத்துவங்கியபோது உறவுகளின் உரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது. இவள் எனது மனைவி இனி வேறு ஆடவன் இவளை அணுகக்கூடாது என்று அறிவிக்க திருமணம் தேவைப்பட்டது. பெண்ணுக்கும் ஆடவன் மீதுள்ள உரிமையை நிலைநாட்ட திருமணம் உதவியது. திருமணம் செய்து கொண்டவர்களும் அந்த உறவுக்கு விரோதமாக நடக்க கூடாது என்றும் கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வில் வேறு மனிதர்கள் குறுக்கிட மாட்டார்கள். அப்படி வாழ்வது மணம் புரிந்து கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் நிம்மதியைத் தந்தது. இப்படிப்பட்ட அமைதியான வாழ்க்கையை தனித்தனிக் குடும்பங்களாக எல்லா மனிதர்களும் வாழ்ந்ததால் ஒரு சமூகமே அமைதியான் சமூகமாக நிம்மதியான வாழ்க்கையை வாழ முடிந்தது. இவ்வித கட்டுப்பாடுகளை மீறிவாழ்வது சமூக விரோதமாகவும், கேவலமான ஒன்றாகவும் கருதப்பட்டதால் அக்காலத்தில் அப்படி மீறுபவர்கள் சமூகத்திலிருந்தே விலக்கிவைக்கப்படுவதும் நடந்தது. எனவே சமூகத்தில் ஒரு அமைதி நிலவியது.
கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டியவன் மனிதன் என்பதால் அவற்றை காகிதத்தில் அச்சடித்து வைக்காமல் மனிதனின் ஆழ்மனதில் அச்சடித்தார்கள். அதற்கு முன்னோர்கள் கடைபிடித்த உபாயம் போதனை செய்தல் மூலமும், இதிகாசக் கதைகளை அடிக்கடி மக்களிடம் சொல்வதன் மூலமும் தர்மங்களை மக்களின் மனதில் எழுதினார்கள்.
ஆண் பெண் உறவுகள் பற்றிச் சொல்லும்போது திருவள்ளுவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:-
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அரனொன்றோ ஆன்ற ஒழுக்கு.
பிறன் மனைவியை இச்சையுடன் பார்க்காத பேராண்மை, நல்லவர்களுக்கு அறன் போன்ற காவலாக இருப்பது மட்டுமல்ல அது மிகச்சிறந்த ஒழுக்கமாகும் என்று கூறுகிறார். ஆண்மை என்பது ஆண் தன்மையைக் குறிக்கும் வழக்கு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் வள்ளுவரோ பேராண்மை என்று குறிப்பிடுவதன் மூலம் ஆண்மையின் சிறப்பு ஒரு ஆண்மகனுக்கு கொடுக்கும் பெருமையை விட பிறருடைய மனைவியின் மீது ஆசைப்படாமல் வாழ்வதே பெருமை என்று ஆணுக்கு எடுத்துரைக்கிறார்.
பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு தீமைகளும் பிறர் மனைவிமீது ஆசைப்பட்டு நாடிச் செல்பவரை விட்டு எப்போதும் நீங்காது என்று கூறிகிறார் வள்ளுவப் பெருந்தகை. கட்டுரையின் ஆரம்பத்தை மீண்டும் படியுங்கள், வள்ளுவரின் வாக்கு சத்தியம் தான் என்பதை ஆழ உணர்வீர்கள்.
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்த்தொழுகு வார்.
சந்தேகப்படாமல் நல்லவர் என்று நம்பி வீட்டுக்குள் அனுமதித்தவர் வீட்டில் தீமையைச் செய்து நடப்பவர் செத்தவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்லர் என்கிறார் வள்ளுவர். அதாவது நம்பியவர் வீட்டிலேயே அவருக்கு துரோகம் செய்து அவரது மனைவியிடம் இச்சைகொள்ளும் ஆண் செத்த பிணத்திற்குச் சமம் என்கிறார். எப்படி வெளியில் இருந்து பிணத்தை வீட்டுக்குள் அழைத்து நாம் வைத்துக்கொள்வதில்லையோ அதே போல அத்தகைய துரோக குணம் கொண்ட ஆண்களை வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என்பதே இதன் பொருள்.
இவ்வாறு ஆணின் பேராண்மையை எடுத்துச் சொன்ன வள்ளுவர் பெண்ணின் கற்பு பற்றிய சிறப்பையும் எடுத்துச் சொல்லுகிறார். இதோ அவர் பெண்ணுக்குச் சொன்னவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.
கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால், அந்தப் பெண்ணைவிடப் பெருமைமிக்கவை உலகில் வேறென்ன இருக்கிறது? ஒன்றுமில்லை என்கிறார் வள்ளுவர். கற்புடன் வாழ்வேன் என்ற உறுதியுள்ள பெண்ணே உலகில் வேறு எல்லா விஷயங்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று வள்ளுவர் கற்புடன் வாழ்வதன் உயர்வை பெண்ணுக்குச் சொல்கிறார் வள்ளுவப்பெருந்தகை. இவ்வாறு இல்லறம் நிம்மதியாக நடைபெற வேண்டுமென்றால் பெண் கற்புடன் வாழ்வேண்டும் அதுவே உயர்ந்த வாழ்க்கை என்று பெரியோர்களால் வலியுறுத்தப்பட்டது.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணித் தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாதவளே பெண். தன் ஒழுக்கத்திலிருந்து தவறாமலும் கற்பு குறையாமல் வாழ்ந்தும் தன் கணவனையும் அன்புடன் நடத்தி இல்லறத்தைக் காப்பதில் சோர்வு அடையாதவளே பெண் என்று எடுத்துரைக்கிறார் வள்ளுவப்பெருந்தகை.
ஆனால் இவையெல்லாம் பள்ளிகூடப் படிப்பில் அதுவும் மனப்பாடப்பாடமாக வந்து மார்க் கொடுத்தால் படித்திருப்போம். அதற்குப் பின் வள்ளுவரை நினைவில் கொள்பவர் யார்? பள்ளிப்படிப்பை விட்டு வெளியே வந்தால் மக்களை அப்படியே ஆக்கிரமிப்பது வள்ளுவமா அல்லது மேலைநாட்டு நாகரீகமா என்றால் மேலை நாட்டு நாகரீகமே என்று அடித்துச் சொல்லலாம்.
கலாச்சாரம் என்பது பழம்பஞ்சாங்கம், மேலை நாட்டு நாகரீகம் படி வாழ்வதே அறிவு என்று பரப்புவர்கள் நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு!
கலாச்சாரத்தைக் காப்போம். குடும்பங்களைக் காப்போம்.
வள்ளுவர் கற்பு பற்றியும் பிறன்மனை நோக்கா பேராண்மை பற்றியும் ராவாக சொல்லியிருக்கும் விஷயங்களை மனதில் பதியும் விதமாக பல கற்புக்கரசி கதைகளைச் சொல்லியும், இதிகாசங்கள் மூலமும் மக்களின் ஆழ்மனதில் பதியச்செய்கின்றனர் நம் முன்னோர்கள். அவ்வாறு ஆயிரக்கணக்கான வருடங்களாக சொல்லப்பட்டுவரும் இதிகாசமே ராமாயணம்.
பொதுவாக மனிதர்கள் மத்தியில் நடக்கும் குற்றங்கள் பெண்ணுக்காக அல்லது பொருளுக்காக மட்டுமே நடக்கிறது. இதை மீறி குற்றங்களுக்கு வேறு காரணங்களை பொதுவாக பார்க்க முடியாது. மனிதப் பெருங்கூட்டத்தின் முக்கியக் குற்றங்களை உண்டாக்கும் இவ்விரு உணர்வுகளுக்கும் ஒரு கட்டுப்பாட்டை ஆழ்மனதில் பதிய வைத்தால் சமூகம் அமைதியாக இருக்கும் என்பதன் காரணமாகவே இவற்றை மூலக்கதையாகக் கொண்ட ராமாயணமும் மகாபாரதமும் காலங்காலமாக மக்களுக்கு போதிக்கப்பட்டு வருகிறது.
பிறன் மனைவி நோக்காப் பேராண்மையாளனாக ராமனையும், கற்புக்குச் சிறந்தவளாக சீதையும் கதாநாயகன் கதாநாயகியாக நமக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தோர்களாக எடுத்துச் சொல்லி அது போல் வாழவேண்டும் என்று மக்கள் மனதில் ஆழப்பதியச் செய்கின்றனர். தற்காலத்தில் இளம் வயதினரை ஈர்க்கும் மனிதர்கள் சினிமா கதாநாயகனும் கதாநாயகியரும்தான். அவர்களுடைய நடை உடை பாவனைகளால் கவரப்படுபவர்கள் அவர்களைப் போலவே தங்களை பாவித்து வாழத்துவங்குவதை பார்த்திருப்போம். ஒரு படத்தைப் பார்க்கும் போது ஆண்கள் அந்தப்படத்தின் கதாநாயகனாக தன்னையே உருவகித்துப் பார்க்கிறான். பெண்கள் கதாநாயகிகளை உள்வாங்குகிறார்கள். காதல் காட்சியில் கதாநாயகனும் கதாநாயகியும் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படியே வெளியே உள்ள மனிதர்களின் வெளிப்பாடும் அது போன்ற தருணங்களில் காட்சியளிப்பதை பார்க்க முடியும்.
இப்படி தங்களை பாதிக்கும் கதாநாயகனும் நாயகியும் ஏக பத்தினி விரதத்தைக் கொண்டவனாக இருந்தால், கதாநாயகி கற்புக்கரசியாக காட்சியளித்தால் இவர்களை உதாரணமாக வைத்து தாமும் வாழவேண்டும் என்று எண்ணுபவர்கள் உண்டாவார்கள். ராமனைப் போல ஆண்களும் சீதையைப் போல பெண்களும் வாழ்வதே சிறந்த உயர்ந்த வாழ்க்கை என்று அழுத்தமாகச் சொல்லப்பட்டது. கேட்பவர்களும் அத்தகைய உயர்ந்த வாழ்க்கை வாழ்பவர்களாக தானும் இருக்கவேண்டும் என்ற உத்வேகம் கொள்வார்கள்.
ராமாயணத்திலிருந்து சில துளிகளை இப்போது பார்க்கலாம்…
சீதையை அடைய பல முயற்சிகள் செய்யும் ராவணனிடம் ஒரு யோசனை சொல்லப்பட்டது. நீ ராமனாகவே சென்று அவள் முன் நின்றால் அவள் ஏமாந்து உன்னிடம் வந்து விடுவாள் என்றார்கள். அதற்கு ராவணன் சொன்னான் “எவ்வளவோ செய்த எனக்கு இதைச் செய்ய முடியாதா? நானும் ராமனாக உருமாறிப்பார்த்தேன். ஆனால் நான் எப்போது ராமனாக மாறினேனோ அப்போதே அடுத்தவர் மனைவிமீது ஆசைப்படும் எண்ணம் எனக்குத் தோன்றவே இல்லை. எனக்கு சீதை மீது ஆசையே வரவில்லையே! நான் என்ன செய்ய?” என்று புலம்பினான்.
அதாவது பிறன் மனை நோக்கும் இச்சை கொண்டவனே ராமனாக ஆனவுடன் அந்த ஆசை அற்றுப் போனது என்று சொல்லுமளவிற்கு ராமனின் ஏக பத்தினி விரதம் போற்றிச் சொல்லப்பட்டது. அவ்வாறு வாழ்வதே ஆண்களுக்குச் சிறப்பு என்றும் போதிக்கப் பட்டது. பின்னால் நாகரீகத்தைப் போற்றியவர்கள் என்ன செய்தார்கள்? ராமாயணம் மூட நம்பிக்கை என்றார்கள். ராமன் இன்ஜினியரா? அவன் தான் பாலம் கட்டினானா? என்றார்கள். ராமாயனத்திற்கு ஆதாரம் இல்லை என்று அறிவியல் கொண்டு ஆனியடித்தார்கள். இப்படி சிதைத்தவர்கள் ராம நம்பிக்கையைச் சிதைக்கவில்லை. அவர்கள் சிதைக்க முயற்சித்தது ராமனாக வாழ முடியும் என்கிற கலாச்சார நம்பிக்கையை.
இப்படி நாகரீகம் கலாச்சாரத்தின் அடிமரத்தை வெட்டிக்கொண்டே இருந்தது. மேலை நாட்டு நாகரீகமே சிறந்தது என்றும் பெருமை பேசப்பட்டது. கமலஹாசன் போன்றவர்கள் திருமனத்தை முட்டள் தனம் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார்கள். நான் மலை மேலிருந்து நீங்களும் அப்படிச் செய்யுங்கள் என்று பிரசாரம் செய்யவில்லை, அது என்கருத்து என்றும் மற்றொரு தொலைக்காட்சியில் உளருகிறார். இவர் பிரசாரம் செய்யவில்லை என்றாலும் இவர் பேசுவது மலை மேல் நின்று பேசுவது போல் பரவும் என்பது இவருக்குத் தெரியாதா என்ன? ஆனாலும் மேலை நாட்டு நாகரீகத்தை பரப்பி இந்திய கலாச்சாரத்தை முட்டாள் தனம் என்று தூற்றுவதை இவர்களைப் போன்றவர்கள் நிறுத்துவதில்லை.
ராமாயனத்தில் பெண்ணின் உயர்வைக்காட்டும் இன்னொரு இடம்..
காட்டில் சீதைக்காக மான் பிடிக்கச் சென்ற ராமன் வெகுநேரம் ஆகியும் திரும்பவில்லை. சீதை கவலையில் ஆழ்ந்தாள். அப்போது மாரீச்சனின் கபடக்குரல் ராமனின் குரலாகக் கேட்டது. “லக்ஷ்மனா…காப்பாற்று…!! லக்ஷ்மனா…காப்பாற்று…!!” என்று. இந்தக் குரலைக் கேட்ட சீதை கலங்கினாள். தன் கணவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று கலங்கினாள். உடனே சீதை லக்ஷனனைப் பார்த்து என்னவென்று கண்டுவரச் சொன்னாள். ஆனால் லஷ்மனனோ “அபயக்குரல் எழுப்பும் அளவிற்கு அண்ணன் ராமன் கோழையல்ல. அப்படி ஒரு ஆபத்து தன் அண்ணனைச் சூழப்போவதும் இல்லை அதனால் கலங்காமல் இருங்கள் என்று தாய் சீதையிடம் எடுத்துரைக்கிறார். தாயே என்று கூறி அழைக்கும் லக்ஷ்மனனை சீதை கோபமாகப் பார்க்கிறாள். “என் கணவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டால், நீ என்னை அடையலாம் என்று எண்ணுகிறாயா?” என்று சற்றும் எதிர் பார்க்காத வகையில் கேட்டுவிட லக்ஷ்மனன் உடனே ராமனைத் தேடி புறப்பட்டு விடுகிறான். பிறகு நடந்த கடத்தல் கதை நமக்குத் தெரியும்.
ஆனால் இங்கே உணர்த்தப்படுவது என்ன? கணவர் இல்லாத போது உடனிருப்பது அவரது தம்பியாக இருந்தாலும் அவன் நல்லவனாகவே இருந்தாலும் தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்பதே ஒரு பெண்ணின் முதல் நினைவாக இருக்கவேண்டும் என்பதும் அதுவே தனது கணவனுக்கு உண்மையாக இருப்பதாகும் என்பதும் உணர்த்தப்படுகிறது. Perception (உள்ளுணர்வு) என்று சொல்வார்களே அதுதான்.
நாகரீகம் என்ற மாயத்தோற்றத்தில் மக்கள் சிக்கித் தவிக்கும் இந்தக்காலத்தில் அப்படி Perception னுடன் நடந்து கொள்ளும் பெண்கள் எத்தனை பேர். ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்ற நாகரீகம் இன்று கணவனுக்கும் மற்றவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்து விட்டது. படுக்கையறையைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு வித்தியாசமில்லாமல் எல்லோருடனும் பெண்கள் ஒரே மாதிரியாகப் பழகுவதை சகஜமாகவே பார்க்க முடிகிறது. நாகரீகம் என்ற பெயரில் சீதையாக வாழ்வது பழம்பஞ்சாங்க நிலையென எள்ளி நகையாடப்படுகிறது. இந்த நிலை தான் தவறான உறவுக்கு அஸ்திவாரமாக அமைகிறது.
பெண்களும் தன்னுடன் பழகும் ஆண்களில் யாருடைய உள்நோக்கம் என்னவென்று தெரியாமல் சீதைக்கு இருந்த அந்த Perception இல்லாமல் பழகி தவறான உறவில் விழுந்து விடுகின்றனர். ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்பது நீண்டநாள் நீடிக்காது. காதல் அல்லது காமத்தில் விழாமல் ஆணும் பெண்ணும் பழக முடியாது என்பதே உண்மை. ஆனால் கலாச்சாரத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்ப்பதே வேலையாகக் கொண்ட பலர் இந்த நட்பு நாகரீகத்தைப் பரப்பினார்கள். திரைப்படங்களும் ஆணும் பெண்ணும் நண்பர்களாக பழக முடியும் என்று முழு பூசனிக்காயை சோற்றில் மறைத்து பணம் சம்பாதித்தது. பஞ்சும் நெருப்பும் பக்கத்திலிருக்கலாம் பற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றனர். பூனையும் எலியும் ஒன்றாய் உறங்கலாம் கடித்துக் கொள்ளாது என்றனர்.
பெற்றோராக இருக்கும் நடுத்தர வயதுக்காரர்கள் இதை அப்படியே நம்பி விட்டார்கள். இதனால் தன் வீட்டுப் பெண்பிள்ளைகள் ஆண்களுடன் மணிக்கனக்கில் தொலைபேசுவதை கண்டுகொள்ளாமல் இருந்தனர். அதை தவறு என்று சுட்டிக்காட்டும் பெற்றோர்கள் புழு பூச்சி போல பார்க்கப்பட்டனர். நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகளாக கண்டிக்கப்பட்டனர். பெண்ணை அடிமைப்படுத்துவதாக சித்தரித்தனர். போதாக்குறைக்கு பெண்ணியம் என்ற வேறு பூதம் கிளம்பி கலாச்சார கட்டுக்கோப்பை புரட்டிப்போட்டது. இந்த பெண்ணிய பூதத்தால் சமூக கட்டுபாடுகள் சின்னாபின்னப் படுத்தப்படுகின்றன. தான் செய்வதெல்லாம் சரி, ஆண் செய்வது மட்டும் தான் தவறு என்பது பெண்ணிய சித்தாந்தம்.
ஆண்களின் நிலைமை அதுவும் கணவன்மார்களின் நிலைமை மிகவும் பரித்தாபத்திற்குரிய்தாக மாறிப்போனது. தனக்கென்று ஒரு பெண்ணை கல்யாணம் செய்து அவளை தனக்காக தக்கவைத்துக் கொள்வது போதும் போதும் என்றானது. வேறு ஆண்மகனிடம் மனைவி எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தாலும் யார் அவன் என்ற கேள்வியைக் கேட்கவே பயப்படும் ஆண்கள் தான் பலர். எங்கே தான் சந்தேகப்படுவதாக பெண்டாட்டி நினைத்துவிட்டால் குடும்ப உறவில் விரிசல் வந்து விடுமோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது. மீறி கேள்வி கேட்டு ஏன் இவ்வளவு நேரம் பேசுகிறாய்? இதையெல்லாம் அலுவலகத்திலேயே பேசி முடித்துவிட வேண்டியது தானே என்று கேட்டுவிட்டால் போதும். அன்று முதல் அவனுக்கு வீட்டில் மரியாதை போய்விடும். குடும்பம் என்ற அமைப்பு கேள்விக்குறியாகிவிடும். இது நாகரீகத்தின் விளைவு.
அதுமட்டுமா? பெண்ணியப் பேச்சாளர்கள் கற்பு என்ன கடைச்சரக்கா? என்னவிலை என்றெல்லாம் கேள்வி கேட்க, குஷ்பு போன்ற நடிகைகள் கற்பு பற்றி விமர்சித்து கண்டனங்கள் எதிர்கொண்டதும் நமக்குத் தெரிந்ததே. அதுமட்டுமா? உச்ச நீதிமன்றத்தின் ஓரினச்சேர்க்கை பற்றிய தீர்ப்பை குஷ்பு வரவேற்றார். இவர்களைப் போன்றவர்கள் தறிகெட்ட வாழ்க்கைக்கு அச்சாரம் தேடி அலைகிறார்கள் அல்லது அடுத்த தலைமுறையை சீரழிவுப்பாதைக்கு தள்ளி விடப்பார்க்கிறார்கள் என்பதே உண்மை.
சினிமாக்களும் சீரியல்களும் தொடர்ந்து சந்தேகப்படும் ஆண்கள் அவமானப்படுத்தப் படுவார்கள். “சீ, கட்டின பொண்டாட்டியை சந்தேகப்படுகிறாயே நீயெல்லாம் ஒரு ஆம்பளையா” என்று வசனம் வைப்பார்கள். ஒரு பெண்ணுக்கு ஆண் நண்பர்கள் இருப்பது சகஜம் என்பது இன்றைய பெண்களின் நிலை. ஆண் பெண் நட்பு நல்லது என்று பிரசாரம் செய்தவர்கள் அதன் அளவு கோலைப் பிரசாரம் செய்யவில்லை. மாறாக ஆணும் ஆணும் பழகுவதைப்போலவே பெண்ணோடு பெண் பழகுவதைப் போலவே ஆணும் பெண்ணும் பழகலாம் என்றே உசுப்பிவிட்டனர். விளைவு கேவலமான பத்திரிக்கைச் செய்திகள் நாறும் அளவிற்கு இன்றைய குடும்ப கலாச்சாரம் சீரழிந்து போய்விட்டது.
பொது இடங்களில் ஆண்களுக்கும் மனக்கட்டுப்பாடு கட்டாயம் தேவை. அலுவலகத்திலோ அல்லது பிற இடங்களிலோ திருமணமான பெண்ணிடம் பேசுகிறோம் என்று தெரிந்தும் தேவையில்லாமல் வலிய போய் சிரித்து பேசி அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வேலையை செய்வது கண்டிக்கத்தக்கது.
தனக்கு உரிமை இல்லாத அதுவும் மணமான பெண்களின் உடை மற்றும் அழகை வர்ணித்தோ அல்லது இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையிலோ பேசுவது நாகரீகமற்ற செயல் என்பதை ஆண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ராமனைப் போல வாழ்வதின் சிறப்பை மனதில் ஆழ்ப் பதிந்து கொள்ள வேண்டும்.
மணமான பெண்ணிடம் வழியும் ஆண்கள் தன் மனைவியிடம் வேறொருவர் அவ்வாறு நடந்தால் நம்மால் பொறுத்துக் கொள்ள முடியுமா என்பதை ஒரு கணம் சிந்தித்து வேறொரு ஆணின் வாழ்க்கையில் குறுக்கிடக்கூடாது என்பதை கண்டிப்பாக மனதில் வைத்து விலகியிருக்க வேண்டும்.
தொழிலதிபராக இருக்கும் ஒரு மதிப்பிற்குரிய பெண்மணியிடம் இந்த ஆண்பெண் நட்பு நாகரீகத்தில் எது அளவு என்றும் நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் வரிசையாக சில விஷயங்களை அடுக்கினார்.
- கணவனைத் தவிற வேறு ஆண்களிடம் தொலை பேசினால் குறைந்த பட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது.
- அப்பா அண்ணன் தம்பி கணவனைத் தவிற மற்றவர்களிடம் என்ன சாப்பிட்டேன், எப்போது தூங்கினே, என்ன உடை போட்டிருக்கிறேன் என்றெல்லாம் கதை பேசக்கூடாது.
- பிற ஆண்களிடம் பேசும் போது என்ன விஷயமோ அதை மட்டும் பேசிவிட்டு பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும்.
- அலுவலகத்தில் கூடவே பணிபுரிபவனாக இருந்தாலும் நல்லவனாகவே இருந்தாலும் அலுவல் தவிற வேறு பேச்சு வைத்துக் கொள்வது கூடாது.
- ஆணுக்கு ஆணும், பெண்ணுக்குப் பெண்ணும் தங்களுக்கென்று கருத்துப் பரிமாற்றத்திற்கு அவர்களுக்குள்ளேயே நல்ல நண்பர்கள் கொண்டிருப்பது எதிர்பாலரிடம் வசப்படுவதை தடுக்கும்.
- அப்பா அண்ணன் தம்பியைத் தவிற மற்ற ஆண்களை கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டில் சந்திக்க வேண்டும். அலுவலக நண்பர்கள், கணவர்களின் நண்பர்கள் என்று யார் வீட்டுக்கு வந்தாலும் கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டுக்குள் அனுமதித்து பேச வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வது பெண்ணுக்கும் பாதுகாப்பு, ஜொள் விட நினைக்கும் ஆண்களின் எண்ணத்தையும் அது தடுக்கும்.
இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போனார், விஷயம் இவ்வளவுதான். ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும் என்பதே அவரது இறுதியான வாக்கியம்.
அப்படியானால் ஆண்கள் ராமனாக இருக்கமாட்டார்கள், பெண்கள் மட்டும் சீதையாகவே இருக்கவேண்டுமா என்று அங்கலாய்க்கும் பெண்கள் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் சுருக்கமாக ஒன்றைச் சொல்ல முடியும். இன்றைய இந்திய மற்றும் இலங்கை பீனல் கோட் இருக்கிறதே அது பெண்களுக்காகத்தானே ஒழிய ஆண்களுக்காக இல்லை.
பேருந்தில் பயணம் செய்யும் போது ஐந்தடி தூரத்தில் இருக்கும் ஆணைப்பார்த்து ஐயோ இவன் என்னை இடித்து விட்டான் என்று ஒரு பெண் சொன்னால் இவ்வளவு தூரம் தள்ளி இருக்கானே எப்படி இடிப்பான் என்று கூட யோசிக்காமல் லாடம் கட்டும் லத்திக் கம்பு நிறைந்த ஊர் தான் நம்முடையது. ஒருவன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினாலோ இரட்டை அர்த்த தொனியில் பேசினாலோ பெண்கள் உடனே (உண்மையாக) கண்டித்துவிட்டால் அடுத்த கட்டத்திற்கு ஆண் செல்வதை தடுக்க முடியும். அந்த வகைப் பேச்சுக்களுக்கு ஆசைப்பட்டு சீ, போ என்றெல்லாம் குழைந்தால் சிக்கிட்டாடா சீமாட்டி என்று அடுத்த அடியை எடுத்து வைக்க எந்த ஆணும் தயங்க மாட்டான். அதையும் மீறி துன்புறுத்துபவனா?, சமூக அச்சம் இல்லாமல் துனிகிறானா? இருக்கவே இருக்கு காவல் துறை லாடம் கட்ட.
இப்படி எல்லா விதமான பாதுகாப்பையும் சட்டதின் மூலம் செய்து கொடுத்த பின்னும் ஆண் நண்பர்கள் என்ற பெயரில் கணவனின் கண்ணில் மண்ணைத்தூவி செல்லும் பெண்களும், ராமனாக வாழ்வது முட்டாள்தனம், கிடைக்குபொழுது அனுபவிப்பதே புத்திசாலித்தனம் என்று நினைத்து மாற்றான் மனைவி மீது மையல் கொள்ளும் ஆண்களுமே பின்னாட்களில் செய்திப்படங்களாகிறார்கள் என்பது உறுதி. நாகரீகத்தின் உச்சம் செய்தித் தாள்களில் சிரிக்கிறது?
சமீபத்தில் அனந்த லட்சுமி என்ற பெண்ணின் கொலைவழக்கைப் பற்றி செய்தித்தாள்களில் பார்த்திருப்போம். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் தங்கள் பக்கத்து வீட்டில் இப்படி நிகழும் என்று? அந்தப் பெண் நள்ளிரவில் மணிக்கணக்கில் கணவர் அல்லாதானிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது. இதைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தவர்களோ அந்தப் பெண்ணா? அப்படியா? என்றே கேட்டிருப்பார்கள். காரணம் ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்று வெளியே பழகத்துவங்கியது பின் அடி மேல் அடிவைத்து நள்ளிறவு அரட்டையாக மாறியிருக்கிறது. சீதையைப் போல் Perception அதாவது தவறு நிகழப்போகிறது என்ற உள்ளுணர்வு அந்தப்பெண்ணுக்கு கொஞ்சமேனும் இருந்திருந்தால் இப்படி செய்திருப்பாளா? விளைவு குடும்ப மானம் நாளிதழ்களில் பல்லைக்காட்டியது.
இந்தியக் கலாச்சாரம் என்பது இந்தியர்களாக வாழ்பவர்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பு வேலியே ஆகும். பாதுகாப்பு வேலியைத் தாண்டி முள்வேலி மீது விழுந்தால் பாதிப்பு நமக்குத்தான் என்பதை கலாச்சாரத்தை கேலி செய்து நாகரீகத்தை உயர்த்திப் பேசுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கலாச்சாரம் என்பது பழம்பஞ்சாங்கம், மேலை நாட்டு நாகரீகம் படி வாழ்வதே அறிவு என்று பரப்புவர்கள் நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு!
கலாச்சாரத்தைக் காப்போம். குடும்பங்களைக் காப்போம்.
நன்றி - ராம்குமார்
No comments:
Post a Comment