Wednesday, January 9, 2013

தவறான விஷம சக்திகளின் வலையில் வீழ்ந்து விடாதீர்கள் - றிஸ்வி முப்தி வேண்டுகோள்


நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்த ஐந்து பேர் போதும். இன்று பேஸ் புக்கினால் ஏற்படும் குழப்பங்களைக் கட்டுப்படுத்த முடியாது. பேஸ்புக்கின் மூலமாக ஒரு கொஞ்சப் பேரை குழப்பத்திற்காக அணி திரட்டுவது அவ்வளவு ஒரு சிரமமான காரியமல்ல. பேஸ்புக்கின் மூலம் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அவதூறாக ஏசிப் பேசினால் அதற்குப் பதிலாக நீங்களும் அவர்களைத் திட்ட ஆரம்பிக்க வேண்டாம். ஸைத்தானிய வார்த்தைகளை நீங்கள் பிரயோகிக்க வேண்டாம். உங்கள் எதிரி உங்கள் மீது மோசமாக நடந்து கொண்டால் நீங்களும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டாம் என்பது அல்லாஹ்வின் கட்டளையாக இருந்து கொண்டிருக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பழிக்குப்பழி என்பதைத் தடுத்திருக்கின்றார்கள்.

நீங்கள் அவர்களைத் திட்டினால் அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள்.' இவ்வாறு அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி கண்டி கட்டுக்கலை ஜும்மாப் பள்ளிவாசலில் வெள்ளிக்கழமை ஜும்மாத் தொழுகை பிரசங்கத்தில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பிரசங்கத்தை நிகழ்த்தும்போது,,

 'முப்பது வருட காலத்திற்குப் பிறகு இந்த நாட்டில் ஒரு முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் எங்களுடைய எதிர்கால வெற்றியையும் நோக்கிய பாதையில் நாடு சென்று கொண்டிருக்கின்றது.  இந்தக் கால கட்டத்தில் சில விசமிகள் வெளிநாட்டுச் சக்கதிகளின் தூண்டுதலினால் இணையத்தளங்களினூடாக தவறான விஷமப் பிரச்சாரங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

நாட்டிலே முஸ்லிம்களை விரோதிகளாகக் காட்டும் சில பல காரியங்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள். உங்களுக்கு நான் அழுத்தமாகச் சொல்கின்றேன் இத்தகைய வேலைகளில் ஒரு பெரிய சமூகம் ஈடுபடவில்லை. இது ஒரு சிறிய குழுவின் நடவடிக்கைதான்.  பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் நாங்கள் கதைத்த போது அவர் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எதுவித தீங்கும் நடந்து விடாவண்ணம் முஸ்லிம்களைப் பாதுகாப்பது தனது கடமை என்று கூறியுள்ளார். 

அதேவேளை குழப்பங்களைத் தூண்டுவோரின் சதிவலைகளில் முஸ்லிம்களை வீழ்ந்து விடாமல் மிக மிக அவதானமாகவும் பொறுமையாகவும் நடந்து கொள்ளுமாறு முஸ்லிம் சமூகத்தைக் கேட்டுக் கொள்ளும்படி எங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் ஒதுங்கி வாழ்ந்துவிட முடியாது, 

அதேவேளை எம்மதமும் சம்மதம் என்று கூறி எங்களது புனித இஸ்லாமிய நெறிமுறைகளை விட்டுக் கொடுக்கவும் முடியாது. இந்த இரண்டுக்குமிடையில் அழகிய முன்மாதிரியைக் கடைப்பிடித்து அவர்களையும் நேர்வழிக்குள் அரவணைக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்துக்கென சிறப்பானதொரு அடையாளம் இருக்கின்றதென்பது நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தவர்களுக்குத் தெரியும். எனவே அந்த கண்ணியத்தை அவர்களிடம் தொடர்ந்து நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டிலுள்ள ஏனைய சமூக மக்களுடன் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு சிறப்பான வழிகாட்டல் பிரகடனத்தை நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம். இது சுமார் எண்ணூற்றுக்கும் மேற்பட்ட நாட்டிலுள்ள சகல முஸ்லிம் உலமாக்களும் கூடி இந்த சிறப்பான தீர்மானத்திற்கு வந்துள்ளோம். அதை நாங்கள் சிங்களத்தில் மொழி மாற்றம் செய்து நாட்டில் சகலருக்கும் விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளோம். அதனைக் கொண்டு இந்த நாட்டிலுள்ள எந்தவொரு பௌத்தரும் இஸ்லாத்தைப் பற்றியோ முஸ்லிம்களைப் பற்றியோ அச்சம் கொள்ள வேண்டி நிலைமை ஏற்படாது. அதனை ஒவ்வொரு முஸ்லிம்களும் கட்டாயம் வாசிக்க வேண்டும். 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் குப்ருக்கு அனுமதியில்லை. பன்சலையில் சிலைகளை வைப்பதற்குப் அவர்கள் உங்களிடம் பணம் கேட்டால் அதற்கு மட்டும்தான் உதவ வேண்டும் என்பதில்லை. ஒரு பன்சலையில் பாலர் பாடசாலை அன்னதானம் வைத்திய சேவை என்று எத்தனையோ குப்ருக்கு அப்பாற்பட்ட சேவைகள் நடந்து கொண்டிருக்கின்றன. 

முஸ்லிம்களிடம் அவர்கள் உதவி கேட்டால் இவற்றுக்காக நாம் உதவலாம் ஆனால் கண்டிப்பாக குப்ர் ஆன செயல்களை மாத்திரம் தவிர்ந்து மற்ற எல்லாவற்றுக்கும்  உதவலாம். குப்ருக்கு உதவ முடியாது ஆனால், காபிர்களுக்கு உதவி செய்ய முடியும்.  பிள்ளைகள் படிப்பதற்குப் பாடசாலை, மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், அன்னதானம் இவை எல்லாவற்றுக்கும் உதவ முடியும். 

எப்பொழுதும் இஸ்லாமிய சிந்தனையுடன் இஸ்லாமிய அடிப்படைகளுடன் ஈமானிய உணர்வுகளுடன் நடந்து கொள்வதுதான் சிறந்தது.  மனிதர்களுக்குப் பயப்பட வேண்டிய தேவையில்லை அதேவேளை அல்லாஹ்வுக்குப் பயந்து மறுமையுடைய சிந்தனையுடன் நடந்து கொண்டால் எந்த விதமான பித்னாக்களும் ஏற்பட வாய்ப்பில்லை. 

அந்நியர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வோம். மற்றவர்களுடைய உணர்வுகளை அல்லாஹ்வின் தூதர் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதித்து நடந்த அழகிய முன்மாதிரிகள் நம் முன்னே இருக்கின்றது. 

இந்த நாட்டிலே இப்பொழுது எதிர்நோக்கக் கூடிய சில தவறான விஷம சக்திகளின் வலையில் தயவு செய்து வீழ்ந்து விடாதீர்கள். இதனை நாங்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த அழகிய வழிமுறைகளால் முறியடிக்க முடியும்.  முதன் முதலாக அவர்களுக்கு நேர்வழி கிடைக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் கையேந்தி துவாக் கேட்போம். 

நாங்கள் செய்யும் பெரும் பாவங்களிலிருந்து மீண்டு கொள்வோம். அதற்காக பிழைபொறுக்கத் தேடுவோம். அடுத்தவருடன் நற்குணமுள்ள அணுகு முறைகளைப் பேணுவோம். மற்றவர்களுடன் அழகிய தொடர்பாடல்களை வைத்துக் கொள்வோம். எங்களைப் பற்றி அவர்களிடம் இருக்கக் கூடிய சந்தேகங்களைத் தெளிவு படுத்துவோம். 

டிசம்பர் 17 ஆம் திகதி ஹலால் உணவுகள் பற்றி அவர்கள் ஏற்படுத்தியிருந்த சந்தேகத்தை நாங்கள் சிங்கள பத்திரிகையில் தெளிவு படுத்தியிருந்தோம். இது பெரும்பாலான சிங்கள சமூகத்தவர்களைச் சென்றடைந்திருக்கிறது. குறிப்பாக பௌத்த பிக்குகள் கூட அதனை வரவேற்றிருக்கின்றார்கள். எங்களுக்கு எதிராக வருகின்ற அனைத்தையும் எங்களையும் இஸ்லாத்தையும் பற்றித் தெளிவு படுத்துகின்ற அருமையான சந்தர்ப்பமாகப் பயன் படுத்திக் கொள்வோம். ஆக்கபூர்வமாக ஆதாரபூர்வமாக புத்தி ஜீவித் தனமாக நாகரீகமாகப் பதிலளிப்போம். அல்லாஹ் நமக்கு வெற்றியைத் தருவான்.' என்றார்.

No comments:

Post a Comment