(கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில்
04-01-2013 வெள்ளிக்கிழமை அன்று அஷ்ஷைக்
ரீ.ஹைதர் அலி (அல்-ஹலீமி) ஆற்றிய ஜும்ஆ
குத்தபா இது)
எம்மில் சில சகோதரர்கள் ' நாம் அந்நிய நாட்டில் வாழக் கூடியவர்கள் எனக் கூறிக் கொண்டு தம்மையே (முஸ்லிம்கள்) தாழ்த்திக் கொள்கின்றனர். இது பிழையான கூற்றாகும். நாம்
இந்தப் பூமியிலே தான் பிறந்தோம். இன்ஷா அல்லாஹ் இதிலே இறந்தால் இந்தப் பூமியிலேதான் அடக்கம் செய்யப்படுவோம். எனவே இந்தப் பூமி எமக்கும் சொந்தமானது. இது எமது தாய் நாடு. இந்நாட்டை நாம் நேசிக்க வேண்டும்' என அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அல்- ஹலீமி தெரிவித்தார்கள். அவர் தமது பிரசங்கத்தில் மேலும் தெரிவித்ததாவது, இன்று சில தீய சக்திகள் முஸ்லிம்களின் ஒற்றுமையையும், அமைதியையும் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
மட்டுமின்றி முஸ்லிம்களை தேசத் துரோகிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்க முனைகின்றனர். இதனைச் செய்வது சில
விஷமிகளே அன்றி எல்லா பௌதர்களும் அல்லர். மேலும் வரலாற்றில் ஒரு காலமும் முஸ்லிம்கள் இந்நாட்டை பிடிக்கவோ அல்லது இதனை நாம் ஆட்சி செய்ய வேண்டும் என்றோ முயற்சித்தது கிடையாது. மாறாக இந்நாட்டை பௌத்தர்கள் ஆட்சி செய்ய வேண்டுமென்றே விரும்பினர். அதற்காக தம்மாலான முயற்சிகளை முழமையாக மேற்கொண்டனர். அவைகளுக்கு கீழ்வரும் வரலாற்றுக் குறிப்புகள் சான்றாகும். 1. கண்டிய மன்னன் சார்பாக முஸ்லிம்கள் ஒல்லாந்தரின் உதவியை நாடினர் என்ற ஒரே காரணத்துக்காகவே 1642ல் மாத்தறையில் 200 முதல் 300 வரையிலான ஆண்களைக் கொலை செய்ததோடு பெண்களையும் பிள்ளைகளையும் சிறைப்படுத்தினர். 2. போர்த்துக்கீசரை துரத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காகவே அல்லது ஒரு நன்றிக்கடனாகவே மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கன் அக்குரனையில் காணி வழங்கி முஸ்லிம்களைக் குடியேற்றினான். 3. கண்டி மன்னன் ஒல்லாந்தரைத் துரத்துவதற்காக உஸ்மான் லெப்பே மௌலா முஹாந்திரம் என்பவரை கர்நாடகா நவாப் முஹம்மத் அலியிடம் தூதனுப்பினார். 4. தமக்கு சுதந்திரமளிப்பதாக அளித்த வாக்குருதியை நிறைவேற்றுமாறு கோரிஅரசாங்க சபை இரண்டாம் உலக யுத்தத்தின் பின் கோரிக்கை விடுத்த போது 3 முஸ்லிம் உறுப்பினர்களும் எவ்வித நிபந்தனையும் விதிக்காது ஆதரவு நல்கினர். 5. இப்பிரேரணை பற்றி D.P. ஜாயா அரசாங்க சபையில் பின்வருமாறு உரையாற்றினார் ' இனரீதியான கோரிக்கைகளையும் இலாபங்களையும் அடைவதைவிட சுதந்திரம் பெறுவது ஒரு முஸ்லிமுக்கு மிகவும் முக்கியமானது. மக்களின் பிறப்புரிமையான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு குறுக்கே நிற்க நான் விரும்பவில்லை.' 6. இதன்பின உரையாற்றிய swrd பண்டாரநாயக்கா முஸ்லிம் உறுப்பினரின் ஆதரவுக்காக தனது சமூகத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும், முஸ்லிம்களின் நியாயபூர்வமான எந்தக் கோரிக்கைகளையும் சீர்தூக்கிப் பார்க்க தான் சித்தமாக இருப்பதாகவும் கூறியமை நோக்கத்தக்கது. 7. 1939ல் நடைபெற்ற அகில இலங்கை அரசியல் மாநாட்டில் சட்டசபை உறுப்பினராகக் கடமையாற்றிய மாகான் மாகார் உரையாற்றும்போது, பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்படுவதை நான் விரும்பவில்லை.இந்நாட்டை சிங்களவர்கள் ஆட்சி செய்வதை நான் எதிர்க்கவில்லை என்பதை நான் என் மனசாட்சியை சானறாக வைத்துக் கூறுகிறேன்' எனக்கூறினார். 8. இதே கூட்டத்தில் உரையாற்றிய அப்போதைய இளம் அரசியல்வாதி பதீஉத்தீன் மஹ்மூத் 'எமது நாட்டுக்குப் பூரண சுதந்திரம் கோருவதில் சிங்கள மக்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.' எனக் கூறினார். சேவை அடிப்படையிலும் எம் நாட்டு சிங்கள மன்னர்களுக்கு முஸ்லிம்கள் மிக நம்பிக்கையாகவும், தமது அந்தரங்க விடயங்களை அறிந்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர். குறிப்பாக வைத்தியத் துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய பணிக்காக வேண்டி அன்றைய மன்னர்கள் முஸ்லிம்களுக்கு சன்மானங்கள் கொடுத்து கௌரவித்தனர். * கண்டியின் அரச நிர்வாகத்திலும் முஸ்லிம்கள் பங்குகொண்டிருந்தனர். கண்டியில் மக்கள் செய்த தொழில்களை அடிப்படையாகக் கொண்டு பல திணைக்களங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை பந்த
என அழைக்கப்பட்டன. இராஜ சிங்கனின் காலத்தில் (1747 – 1781) ஷேஹ் ஆலிம் என்பவர் மடிகே பந்த எனும் திணைக்களத்துக்குப் பொறுப்பாக இருந்தார். அவர் மடிகே பந்த நிலமே என அழைக்கப்பட்டார். * இதேபோல முகாந்தரம், லேகம், கிராமத்தலைவர் எனும் பதவிகளையும் முஸ்லிம்கள் வகித்தனர். கண்டிய அரசின் வைத்தியத் துறைத்தலைவராகவும் முஸ்லிம்கள் பணியாற்றியுள்ளனர். இவர்கள் பெஹேத்கே முகாந்திரம் நிலமே என்றழைக்கப்பட்டனர். ராஜபக்ஷ வைத்தய திலக கோபால எனும் குடும்பப் பெயர் கொண்டழைக்கப்பட்ட முஸ்லிம் வைத்தியருக்கு கண்டி மன்னன் 1747ல் உடுநுவரையில் நிலம் வழங்கி கௌரவித்தான். * மற்றொரு வைத்தியரான பூவலிகட வெதராலகே அபூபக்கர் புள்ளே என்பவருக்கு 1786ல் தஸ்கரையில் நிலங்களை வழங்கினான். * கண்டி மன்னனின் படையில் 2ம் இராஜசிங்கனின் காலத்தில் (1635 – 1687) இருந்து முஸ்லிம்கள் இராணுவ வீரர்களாகக் கடமையாற்றியுள்ளனர். 1810ல் 250 முஸ்லிம் வீரர்களும் 200 மலாய் வீரர்களும் கண்டி மன்னனின் படையில் பணியாற்றினர். நாம் ஏன் பல தசாப்த கால நிகழ்வுகளுக்குக்குச் செல்ல வேண்டும்? இன்னும் ஒரு வருடம் கூட நிறைவு பெறாத நிகழ்வுகளும் உள்ளன. அதாவது இந்நாட்டுக்கும் இந்நாட்டு இறைமைக்கு மட்டுமல்லாதுஇந்நாட்டு தலைமைக்கும் ஆபத்து வரப் போகிறது என்பதற்காக, எமது நாட்டு முஸ்லிம்களின் தலைவர்களான அ.இ.ஜ.உ வின் தலைவர் உற்பட உபதலைவரும் ஐ. நா சபை சென்று தமது நாட்டுக்கும் நாட்டுத் தலைவருக்கும்
ஆதரவு வழங்குமாறு பரிந்துரை பேசச் சென்றதை இந்நாட்டு முஸ்லிம்கள் இன்னும் மறக்கவில்லை. பெரும்பான்மை சமூகமும் மறக்க முடியாது. ஆனால் நாட்டினதும், நாட்டு மக்களினதும் முன்னேற்றத்திற்காக பாடுபடும் இந்தத் தலைவர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்து எழுதுவது முஸ்லிம்களின் உள்ளங்களைப் புண்படுத்தியுள்ளது எனவும் தமது பிரசங்கத்தில் குறிப்பிட்டார்.
-Thanks JaffnaMuslim-
No comments:
Post a Comment