Saturday, July 6, 2013

ரமளான் மாதத்தை வரவேற்போம்

ரமளான் மாதம் எம்மை இன்னும் சில தினங்களில் வந்தடைய இருக்கிறது. இது நன்மைகள் மற்றும் அருட்கொடைகளின் மாதம்! வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம்!! இது ஒரு உன்னதமான பருவகாலமாகும். இம்மாதத்தில் அல்லாஹ் ஏராளமான கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கின்றான்.

இந்த மாதத்தைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்:

ரமளான் மாதம் எத்தகையதெனில் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதாகவும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது.

இதையே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் :

இறையருளும் பாவமன்னிப்பும்
, நரகத்திலிருந்து விடுதலையும் சூழ்ந்திருக்கும் மாதம்! ஆம்! இம்மாதத்தின் ஆரம்பம் அருள்மிக்கதாகவும் நடுப்பகுதி பாவமன்னிப்பை வழங்கக் கூடியதாகவும், இறுதிப் பகுதி நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்யக் கூடியதாகவும் உள்ளது.

மேலும், ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. மேலும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது (நூல் : புகாரி )

ஒருவன் வயிற்றுப் பசியுடன் இருக்கும் நிலைக்கும், அவன் இறைவனுக்காகவே அந்தப் பசியை ஏற்றுக் கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. மற்ற காலங்களில் பசி வந்தவுடன் பொறுமையை இழந்து விடக் கூடிய மனிதன் இறைவனுக்காகவே அந்தப் பசியைத் தாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அவனுக்கு இறைவனைப் பற்றிய நினைவு அவனுக்கு அதிகப்படுத்தப்படுகின்றது. அந்த நிலையில் இறைவனைப் பற்றி சிந்திப்பதற்கும், இறைவனை (திக்ர்) நினைவு கூர்வதற்கும் உள்ளத்திற்கு தனிமை கிடைக்கின்றது. ஏனெனில் ஆசைப்படும் பொருள்களையெல்லாம் உண்பதென்பது மெய் மறதியை உண்டாக்கும். சிலநேரம் இதயத்தையே இறுகச் செய்து விடும். சத்தியத்தை விட்டும் இதயத்தைக் குருடாக்கி விடும். இதனால் தான் முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவுறித்தினாhகள் :

ஆதத்தின் மகன் மிகவும் கெட்டதொரு பையை நிரப்புவானெனில் அது வயிறாகத் தான் இருக்கும். ஆதத்தின் மகனுக்கு அவனது முதுகை நிமிர்த்துவதற்கு ஒரு சில கவளங்களே போதுமானதாகும். அதிகம் உண்ண வேண்டுமெனில் (வயிற்றில்) மூன்றில் ஒரு பகுதியை உணவுக்காகவும், மற்றொரு பகுதியைத் தண்ணீருக்காகவும் இன்னொரு பகுதியைத் தனக்காகவும் ஆக்கிக் கொள்ளட்டும் (அஹமத், நஸரூடவ், இப்னு மாஜா)

நோன்பு மனதைக் கட்டுப்படுத்தி, அதனை அடக்குவதற்கும் பயிற்சி அளிக்கின்றது. மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் இது தருகின்றது. இதன் மூலம் மனிதன் தன் மனதின் மீது ஆதிக்கம் செலுத்தி மனத்தை வென்றெடுக்க முடிகின்றது. நன்மையும், நற்பேறுகளும் எதில் உள்ளதோ அதன்பால் அதற்கு வழிகாட்டி அழைத்துச் செல்லவும் முடியும். ஏனெனில், மனித மனம் தீயதை அதிகம் தூண்டக் கூடியதாக இருக்கின்றது. எவருக்கு அல்லாஹ் கருணை புரிந்தானோ அவர்களது மனதைத் தவிர! மனிதன் தனது மனதின் கடிவாளத்தை அவிழ்த்து விட்டால் அது அவனை அழிவில் தள்ளிவிடும்! அதன் மீது அதிகாரம் செலுத்தி அதன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தினால் உன்னதமான பதவிகளின்பால் - உயர்ந்த குறிக்கோளின் பால் அதனை அவன் வழி நடத்திச் செல்லவும் முடியும்.

நோன்பானது மனிதனது மனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, சத்தியத்திற்குப் பணிந்திடும் வகையில் - மக்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும் முறையில் அதன் ஆணவத்தைக் கட்டுப்படுத்துவதாகும். ஏனெனில், வயிறு நிரம்ப உண்பதும், பருகுவதும், பெண்ணிடம் உடலுறவு கொள்வதும், இவை அனைத்தும் மனதைத் தற்பெருமை கொள்ளும்படித் தூண்டி விடுகின்றன. சத்தியத்தை ஏற்காமல் ஆணவம் கொள்ளும்படியும், மக்களிடம் அகம்பாவமாக - வரம்பு மீறி நடக்குமாறும் செய்கின்றன. இவன் இவ்வாறு மாற்றம் கொள்வதற்குக் காரணம், மேற்கண்ட மூன்று தேவைகளையும் அவன் பெற்றுக் கொள்வதற்காக அவன் பல்வேறு வழிகளைக் கைக்கொண்டு, அதில் வெற்றி பெற்று விட்டானானால், தனது நோக்கத்தில் தான் வெற்றி பெற்று விட்டதாகக் கருதி, அதனால் அவன் பூரிப்பும், தற்பெருமையும் கொண்டு விடுகின்றான். இதற்காக அவன் மேற்கொண்ட முயற்சிகள் இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட வழிகள் தானா என்று கூட அவன் பார்ப்பதில்லை. இவையே இந்த மனிதனது இம்மை, மறுமை அழிவுக்குக் காரணமாகி விடுகின்றது. அல்லாஹ் யாருக்குப் பாதுகாப்பு அளித்தானோ அவரே இதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர் ஆவார்.

நோன்பின் பயனாக ஷைத்தானின் ஊசலாட்டங்கள் அடங்குகின்றன! இச்சை மற்றும் கோபத்தின் வேகம் தணிகிறது! இதன் அடிப்படையில் நபியவர்கள் கூறினார்கள்: ஓ! இளைய சமுதாயமே! உங்களில் எவர் திருமண (ம் செய்து கொள்வதற்குச்) சக்தி பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்தக் கூடியது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கக் கூடியது . எவர் அதற்குச் சக்தி பெற வில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும்! திண்ணமாக நோன்பு அவருக்கொரு கேடயமாகும்! (புகாரி, முஸ்லிம்).

திருமணம் மற்றும் அது சம்பந்தப்பட்ட ஆசைக்குக் கேடயமாகவும், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாக நோன்பு திகழ்கின்றது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.




ரமளான் மாதத்தின் சிறப்பு என்னவெனில் இந்த மாதத்தில் நோன்பாளிகளின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. தீமைகள் மறைக்கப்படுகின்றன. அதாவது, அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவராகவும், தன் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதைத் திருப்திப்பட்டவராகவும் - அதற் கான நன்மையை - நற் கூலியை எதிர்பார்த்தவராகவும் யார் நோன்பு நோற்கிறாரோ, மேலும் அது கடமையாக்கப்பட்டதை வெறுக்காமலும் அதன் நற்கூலியில் சந்தேகம் கொள்ளாமலும் யார் நோன்பு நோற்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான்!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஐங்காலத் தொழுகைகளும், ஜும்ஆத் தொழுகைகளும் ரமளான் மாத நோன்புகளும் - அவ்வப்போதைய காலத்தின் பாவங்களைப் போக்கி விடுகின்றன. பெரிய பாவங்கள் தவிர்க்கப்படும் பட்சத்தில் ..! (முஸ்லிம்)

நோன்பில் அதன் நன்மைகளை இவ்வளவு தான் என ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்த முடியாது. மாறாக நோன்பு நோற்றவருக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படுகின்றது! மேலும், இறைவன் கூறுகின்றான்: மனிதனின் எல்லா அமல்களும் அவனுக்குரியனவாகவே உள்ளன. ஆனால் நோன்பைத் தவிர! நிச்சயமாக! அது எனக்குரியது. உங்களில் யாரும் நோன்பு வேளையில் பாலியல் தொடர்பான பேச்சுக்கள் பேச வேண்டாம். கூசசலிட்டுப் பேச வேண்டாம். யாராவது அவரை ஏசினால் அல்லது சண்டைக்கு வந்தால், நான் நோன்பு நோற்றிருக்கின்றேன் என்று கூறி விடட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயில் இருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட அதிக வாசனை கொண்டதாகும்.

நோன்பாளிகளுக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று: நோன்பு திறக்கும் பொழுது அடையும் மகிழ்ச்சி, இரண்டாவது: தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி!.

முஸ்லிமில் உள்ள மற்றோர் அறிவிப்பில் - மனிதனின் ஒவ்வொரு அமலுக்கும் கூலி இரட்டிப்பாக வழங்கப்படுகிறது. ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குவரை கூலி வழங்கப்படுகிறது. இறைவன் கூறுகின்றான் : நோன்பைத் தவிர! ஏனெனில் அது எனக்குரியது. நானே அதற்குக் கூலி வழங்குகிறேன்! காரணம் ஆசையையும் உணவையும் அவன் எனக்காக விட்டு விடுகின்றான். இந்த மகத்தான நபிமொழி நோன்பின் சிறப்புக்களைப் பல்வேறு வகையில் எடுத்துரைக்கிறது.

திருக்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவதற்கு முயற்சி செய்யுங்கள். குறிப்பாக இந்தப் புனிதமிகு ரமளான் மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. இந்த மாதத்தில் திருக்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவது சிறப்பிற்குரியது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு தடவை ஓதிக்காட்ட நபியவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் எந்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்களோ, அந்த ஆண்டு - மனதில் நன்கு பதிய வைப்பதற்காகவும், உறுதிப்படுத்து வதற்காகவும் - இரண்டு தடவை ஓதிக் காட்டினார்கள்.

நல்லோர்களான நம்முன்னோர்கள் ரமளான் மாதத்தில் தொழுகையிலும், வெளியிலும் குர்ஆனை அதிகமதிகம் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.

குர்ஆன் ஓதுவதென்பது இரண்டு வகைப்படும் :

1) திலாவா ஹுக்மிய்யா

2) திலாவா லஃப்ளிய்யா.

திலாவா ஹுக்மிய்யா என்றால், குர்ஆனின் செய்திகள் உண்மையென ஏற்பதும் அதன் சட்டங்களை அமுல்படுத்து வதுமாகும். அதன் ஏவல்களைச் செய்வதன் மூலமும், அதன் விலக்கல்களை விட்டு விலகுவதன் மூலமும் அதனைப் பின்பற்றுதலைக் குறிக்கும்.

திலாவா லஃப்ளிய்யா என்றால, கிராஅதுல் குர்ஆன் என்கிற ஓதுதலாகும். இதன் சிறப்பு குறித்து, ஏராளமாக குர்ஆனின் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன. குர்ஆன் முழுவதையும் ஓதுவதன் சிறப்பு குறித்தும், குறிப்பிட்ட அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு குறித்தும் அவை பேசுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது தன்னை ஓதக் கூடிய வர்களுக்கு மறுமை நாளில் பரிந்துரை செய்யக் கூடியதாக வரும். (முஸ்லிம்)

எந்த ஒரு குழுவினர் அல்லாஹ்வுடைய பள்ளிவாசலில் ஒன்று கூடி குர்ஆனை ஓதுகிறார்களோ மேலும் தங்களுக்கிடையே அதனை ஆய்வு செய்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயம் அமைதி இறங்குகிறது. அவர்களைக் கருணை சூழ்கிறது. மேலும் அவர்களை மலக்குகள் வளைந்து கொள்கிறார்கள். மேலும் அல்லாஹ் அவர்களைப் பற்றி - தன்னிடம் உள்ளவர்களிடம் எடுத்துரைக்கின்றான். (முஸ்லிம்)

குர்ஆனைத் தொடர்ந்து ஓதி வாருங்கள். எனது உயிர் யார் கை வசம் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! இந்தக் குர்ஆன் (தொழுவத்தில்) கட்டப்பட்டுள்ள ஒட்டகத்தை விட வேகமாக பிய்த்துக் கொண்டு ஓடக் கூடியதாக இருக்கிறது. (புகாரி)

உங்களில் எவரும் இந்த ஆயத் - வசனத்தை நான் மறந்து விட்டேன் எனறு சொல்ல வேண்டாம். உண்மையில் அவர் தான் மறக்கடிக்கப்பட்டார் (முஸ்லிம்)

நான் மறந்து விட்டேன் என்பதன் காரணம், குர்ஆனில் அவர் மனனம் செய்திருந்தவை குறித்து அவர் பொடுபோக்காக இருந்து விட்டார். அதை மறந்து விடும் அளவுக்கு அவர் அலட்சியத்துடன் இருந்திருக்கின்றார் என்பதையும் காட்டுகின்றது. அதாவது குர்ஆனுக்கும் அவருக்கும் தொடர்பின்மையைக் காட்டுகின்றது.

நிச்சயமாக இநதக் குர்ஆன் அல்லாஹ்வின் விருந்துபச்சாரமாகும். அவனது விருந்துபச்சாரத்தை ஏற்றுக் கொள்;;; ளுங்கள். திண்ணமாக இந்தக் குர்ஆன் அல்லாஹ்வின் உறுதியான கயிறு, தெளிவான ஒளி, பயனுள்ள நிவாவரணியாகும். இந்தக் குர்ஆனை யார் பற்றிப் பிடித்து நிற்கிறாரோ அவருக்குப் பாதுகாப்பாகவும், அதைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கு

பகல்-இரவு எல்லா நேரங்களிலும் எந்த அமல்கள் இறைவனாடு உங்களுக்க நெருக்கத்தை ஏற்படுத்துமோ அந்த அமல்களைச் செய்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதுங்கள். ஆயுட்காலம் வேகமாகச் சுருட்டப்படுகின்றது. காலங்கள் அனைத்தும் எவ்வாறு கழிந்து செல்கிறதெனில் பகலின் சில மணி நேரங்கள் கழிந்தது போன்றே தோன்றுகின்றது.

யா அல்லாஹ்! உனது வேதத்தை உனக்குத் திருப்தி அளிக்கும் வகையில் ஓதுகின்ற பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! அதன் மூலம் எங்களை

யா அல்லாஹ்! இந்தக் குர்ஆன் மூலம் எங்களது அந்தஸ்தை உயர்த்துவயாக! மேலும் இதன் மூலம் எங்களை விட்டும் தீமைகளைப் போக்குவாயாக! உனது கருணையினால் எங்களுக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும், கருணையாளர்களில் எல்லாம் கருணையாளனே! பாவமன்னிப்பும் வழங்குவாயாக!

யா அல்லாஹ்! எங்களுடைய நோன்புகளைப் பாதுகாப்பாயாக! எங்களுக்குப் பரிந்துரை செய்யக் கூடியதாக அவற்றை ஆக்கியருள்வாயாக! மேலும் எங்கள் பாவங்களையும், எங்கள் பெற்றோர் பாவங்களையம் அனைத்து முஸ்லிம்களின் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக!

No comments:

Post a Comment