Monday, December 9, 2013

திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் 03

தொடர்ச்சி...


2. மணவாளனின் குடும்பப் பின்னணி

அறபிகள் குடும்பப் பின்னணிக்கு கூடுதல் கவனம் செலுத்துவர். குடும்பம், குலம், கோத்திரம் பார்ப்பதை சட்ட அறிஞர்கள் ஷகபாஅத்| எனும் பெயரில் வழங்குவர். தகுதிபார்த்தல், பொருத்தம் பார்த்தல் என்பது இதன் பொருளாகும். இவ்வாறு திருமணத்தின் போது தகுதி பார்க்க முடியுமா? எனும் விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. பொதுவாக நோக்குமிடத்து மார்க்கப் பற்றும் நற்குணமும் நன்னடத்தையும் ஒரு மணவாளனுக்கு போதுமான தகமைகளாகும். இதனாலேயே அபீசீனிய அடிமையாக இருந்த பிலாலுக்கு குறைஷியரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் அவர்களின் சகோதரி திருமணம் முடித்து வைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் தனது மாமி மகளான ஸைனபை தனது அடிமையாக இருந்த ஸைதுக்கு மணம் முடித்து வைத்தார்கள்.எந்தவொரு முஸ்லிம் ஆணும் எந்தவொரு முஸ்லிம் பெண்ணுக்கும் பொறுத்தமானவர், தகுதியுடையவர் என்ற மிக முற்போக்கான மார்க்கத் தீர்ப்பை இமாம் இப்னு ஹஸ்ம் வழங்கியுள்ளார்.

ஆயினும் நடைமுறையில் குடும்ப வாழ்க்கையில் உயர்வுச் சிக்கல், தாழ்வுச் சிக்கல் முதலான உளவியல் பிரச்சினைகள் உருவாகி குடும்ப வாழ்வு சிக்கலாகி விடக் கூடாது என்பதற்காகவே சில இமாம்கள் திருமணத்தின் போது தகுதி பார்த்தலை ஒரு நிபந்தனையாக குறிப்பிட்டார்கள்.

மேற்குறிப்பிட்ட அம்சங்களோடு பெண் கன்னிப் பெண்ணாக இருந்தால் ஏலவே திருமணம் முடிக்காத ஒருவரை மணவாளனாகத் தெரிவு செய்வது வரவேற்கத்தக்கது. அவ்வாறே அவரின் பொருளாதார வசதியை கவனத்திற் கொள்வதும் பிழையானதல்ல. ஆனால் மார்க்கப்பற்றும் நற்குண, நல்லொழுக்கமுமே முக்கியத்துவமும் முன்னுரிமையும் பெறல் வேண்டும்.
வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதில் இஸ்லாம் கூறும் இத்தகைய வழிகாட்டல்களை கவனத்திற் கொண்டு செயற்பட்டால் திருப்தியான, நிறைவான இல்லற வாழ்வு கிட்டும். இவை புறக்கணிக்கப்படும் போது குடும்ப வாழ்வு கசக்கும். கவலையும் கைசேதமுமே கடைசி வரைத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

கன்னிப் பெண்ணைத் தெரிவு செய்தல்

ஒப்பீட்டு ரீதியில் ஏலவே திருமணம் முடித்த ஒரு விதவையை விட கன்னிப் பெண்ணைத் தெரிவு செய்வது நல்லது என்பது நபியவர்களின் வழிகாட்டலாகும். ஒரு முறை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் ஒரு விதவையைத் திருமணம் முடித்ததை அறிந்த நபி (ஸல்) அவர்கள் அந்நபித்தோழரைப் பார்த்து,'உமக்கு ஒரு கன்னிப் பெண் கிடைக்கவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் தனது மரணமான தந்தைக்கு பல சிறு பெண்பிள்ளைகள் இருப்பதாகவும் அவர்களை பராமரிப்பதற்கு ஒரு விதவைப் பெண்ணே பொருத்தமானவள் என்றும் அதனால்தான் தான் ஒரு விதவையை மணம் முடித்ததாகவும் விளக்கம் சொன்னார்.


வயது, குடும்பப் பின்னணி, சமூக அந்தஸ்த்து, பொருளாதார நிலை முதலானவற்றை கவனத்திற் கொள்ளல்

இல்லற வாழ்வு வெற்றிகரமாக அமைய மேற்குறித்த அம்சங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமாவை அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோர் மணமுடிக்க விரும்பிய போதும் அவர்களுக்கு மணமுடித்து வைக்காமல் அலி (ரழி) அவர்களுக்கு மணமுடித்து வைத்தமை கவனிக்கத்தக்கதாகும்.

ஒரு பெண்ணும் தனக்குரிய வாழ்க்கைத் துணைவனை தெரிவு செய்யும் உரிமையைப் பெற்றிருக்கிறாள்.

ஒரு விதவையை அவளது முடிவு பெறப்படாமல் திருமணம் செய்து வைத்தலாகாது. கன்னிப் பெண்ணையும் அவளது சம்மதத்தைப் பெறாமல் திருமணம் செய்து வைக்கக் கூடாது என்பது நபியவர்களின் கட்டளையாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அவளது சம்மதம் எப்படி பெறப்படல் வேண்டும் என ஸஹபாக்கள் வினவியபோது நபி (ஸல்) அவர்கள் 'அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்றார்கள்.
(புகாரி, அஹ்மத்)

ஒரு விதவை அவளது பொறுப்புதாரியை (வலி) விட அவளது விவகாரத்தைத் தீர்மாணிக்கக் கூடிய அருகதையும் தகுதியும் உடையவளாவாள். ஒரு கன்னிப் பெண்ணைப் பொருத்த வரையில் அவளது சம்மதம் கோரப்படல் வேண்டும். அவளது மௌனமே அவளது சம்மதமாகும் (முஸ்லிம், திர்மிதி, நஸாஈ) என்ற நபிமொழியும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஹன்ஸா பின்த கிதாம் அல்அன்ஸாரியா என்ற விதவைப் பெண்ணை அவளின் தந்தை அவளது விருப்பத்திற்கு மாற்றமாக ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார். அப்பெண் இது பற்றி நபியவர்களிடம் முறைப்பாடு செய்யவே அன்னார் அத்திருமணத்தை செல்லுபடியற்றதாக ஆக்கினார்கள். 
(புகாரி, திர்மிதி, இப்னு மாஜா)

மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒரு கன்னிப் பெண் நபியவர்களிடம் வந்து தனது தந்தை தனது விருப்பத்திற்கு மாற்றமாக தன்னை ஒருவருக்கு மணம் முடித்து வைத்துள்ளதாக முறைப்பட்டாள். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அத்திருமணத்தை அந்தப் பெண்ணின் தெரிவிற்கு விட்டார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)

மேற்கண்ட ஹதீஸ்கள், தான் விரும்பாத தனக்கு திருப்தி இல்லாத ஒருவரை மணம் முடித்து வைக்க ஷவலி முனைகின்ற போது அதனை மறுக்கின்ற நிராகரிக்கின்ற உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டு என்பதைக் காட்டுகின்றன. உண்மையில் தகப்பனோ அல்லது ஷவலி ஆக இருப்பவரோ ஒரு பெண்ணை அவள் விரும்பாத ஓர் ஆணுக்கு நிர்ப்பந்தித்து மணம் முடித்துக் கொடுக்கும் உரிமையைப் பெற்றவர் அல்ல.

ஏலவே திருமணம் முடித்து பின்னர் விதவையான ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் திருப்தி காணாத ஒருவருக்கு அவளை மணம் முடித்து வைப்பதற்கு எவருக்கும் எந்த உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது இமாம்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும். வயது வந்த ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்தவரையிலும் அவளையும் குறிப்பிட்ட ஓர் ஆணை மணம் முடிக்க நிர்ப்பந்திக்க முடியாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். பருவ வயதை அடைந்த ஒரு கன்னிப் பெண்ணின் செல்வத்தை அவளது அனுமதியின்றி கையாள்வதற்கு அவளது தந்தைக்கோ மற்றொருவருக்கோ அனுமதியில்லை என்பது முடிவான கருத்தாகும். பொருள் விடயத்திலேயே ஷரீஅத் இத்தகைய ஒரு நிலைப்பாட்டைக் கொள்வதாக இருந்தால் முழு வாழ்வுடனும் தொடர்பான திருமண விடயத்தில் எவ்வாறு வலி தான் விரும்பிய முடிவை எடுக்கும் உரிமையைப் பெறுவார்?!! உயிர், பொருளை விட மேலானது. திருப்தியில்லாத நிலையில் துவங்கும் குடும்ப வாழ்வினால் விளையும் கேடுகளுக்கு முன்னால் பொருள் நஸ்டம் அலட்டிக் கொள்ளத்தக்கதல்ல.


ஆயினும் ஒரு யுவதி அனுபவ குறைவினாலும் முதிர்ச்சியின்மைக் காரணமாகவும் சிலபோது தனது வாழ்க்கைத் துணைவனைத் தெரிவு செய்வதில் தவறு இழைத்து விட வாய்ப்புண்டு. இதனால் ஷரீஅத், தனது பொறுப்பில் இருக்கும் யுவதிக்கான கணவனைத் தெரிவு செய்து மணமுடித்து வைக்கும் பொறுப்பை தந்தை முதலான வலிகளுக்கு வழங்கியுள்ளதோடு தனது வலியின் தெரிவை ஏற்கும் உரிமையையும் மறுக்கும் உரிமையையும் அந்தப் பெண்ணுக்கு அளித்துள்ளது. அவ்வாறே தகுதியற்ற, பொருத்தமற்ற ஒருவனை தனது பொறுப்பில் உள்ள பெண் தெரிவு செய்தால் அதனை நிராகரிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் வலிக்கு வழங்கியுள்ளது.

ஆயினும் இன்று நடைமுறையில் ஒரு பெண் தனக்குரிய கணவனை சுதந்திரமாக தெரிவு செய்யும் உரிமையை பல போது இழந்து விடுகின்றாள். அவளது விருப்பு, வெறுப்பை விட தாய், தந்தையின் விருப்பு, வெறுப்பே கூடிய முக்கியத்துவம் பெறுகின்றது. தான் விரும்பாத போதும் தந்தையின் விருப்பம், தாயின் தெரிவு என்பதற்காக ஒருவருக்கு வாழ்க்கைப்படும் நிலை பெண்களில் பலருக்கு ஏற்படுகின்றது. குடும்ப வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளும் சிக்கல்களும் தோன்றுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.

Jazzakallah - Sheikhagar.org

No comments:

Post a Comment