Tuesday, May 13, 2014

வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிதல்

Copied from All Ceylon Jammiyathul Ulama's website, 
பிரசுரித்த தேதி 20.04.2004ஹிஜ்ரி தேதி 29.02.1425 பதிவு இல 006/ACJU/F/2004/011 

வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிதல் தொடர்பில் சன்மார்க்கத் தெளிவு வேண்டி தங்களால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2003.09.22 கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.

மேற்படி விடயம் சம்பந்தமான தெளிவு பின்வருமாறு:

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு அனைத்திற்கும் புனித இஸ்லாத்தின் சிறப்பான வழிகாட்டல்கள் சம்பூரணமாக காணப்படுகின்றன. அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதன் அவனின் வழிகாட்டல்களுக்கேற்ப நடப்பது கட்டாயமாகும். அல்லாஹ்வின் சட்டங்களும், ஏவல் விலக்கல்களும் ஒரு முஃமினின் முன் மற்றெல்லாவற்றையும் விட பெரியவை, முதன்மை பெறுபவை. ஹலால் (அனுமதிக்கப்பட்டது), ஹராம் (தடுக்கப்பட்டது) ஆகிய பதங்களுடன் இறை விசுவாசி எப்பொழுதும் மிகுந்த தொடர்புடையவன்.

மனிதனை சிருஷ்டித்த அல்லாஹ் அவனின் வாழ்வாதாரத்தைத் தேடிப்பெற்றுக்கொள்ளுமாறு கட்டளையிடுகின்றான். உழைத்து வாழ்வதை அல்லாஹ் சட்டரீதியாக ஆக்கியிருக்கின்றான். பொருளீட்டலின் போது கடைபிடிக்கப்படவேண்டிய விதிகளையும், ஒழுங்குகளையும் இஸ்லாம் மிகத் துல்லியமாக எடுத்தியம்பியுள்ளது.

கொடுக்கல் வாங்கல் என்பது குறைந்தது இரு நபர்களுக்கிடையில் நடைபெறும் ஓர் அம்சமாகும். இதில் சம்பந்தப்படும் திறத்தவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். ஒரு திறத்;தவர் கூட பாதிப்படைய இஸ்லாம் அறவே அனுமதிக்கவில்லை.

வியாபாரத்தை அனுமதித்த இஸ்லாம் வட்டியை முற்றாக தடுத்தது. வட்டியை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் திறத்;தவர்களில் ஒரு திறத்தவருக்கு ஏற்படும் அநீதி, மற்றும் பல பாதிப்புக்களைக் கவனத்திற்கொண்டே இது தடுக்கப்பட்டுள்ளது.

பின்வரும் அல்-குர்ஆனிய வசனங்கள் வட்டி பற்றி பேசுகின்றன:
‘வட்டியைத் திண்பவர்கள் ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவன் எழுத்திருப்பது போல் அன்றி எழமாட்டார்கள். இது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ‘வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றதே’ எனக் கூறியதால் ஆகும். அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி, வட்டியை தடைசெய்து வைத்துள்ளான்.’ (2:275)
‘விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நீங்கள் விசுவாசம் கொண்டவர்களாக இருப்பீர்களாயின், வட்டியில் எஞ்சியிருப்பதை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் போர் செய்வதை அறிந்து கொள்ளுங்கள்.’ (2:278, 279)
அவ்வாறே நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் பல்வேறு பொன்மொழிகள் வட்டியை ஹராம் என தெளிவாகப் பிரகடனப் படுத்துகின்றன.
‘அழிவை உண்டாக்கும் ஏழை தவிர்ந்து கொள்ளுங்கள் என நபியவர்கள் கூறிய போது, அவை எவை என தோழர்கள் வினவினர். அதற்கு நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், அல்லாஹ் தடுத்த ஓர் ஆண்மாவை உரிமையின்றி கொலை செய்தல், வட்டி உண்ணல், அநாதையின் சொத்தை உண்ணல், யுத்த தினத்தில் புறமுதுகுகாட்டி ஓடுதல், விசுவாசிகளான பத்தினிப் பெண்களை அவதூறு கூறல் என்றார்கள்.’ (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: சஹீஹுல் புகாரி, சஹீஹு முஸ்லிம்)
‘வட்டி 73 வாயல்களாகும். அவற்றில் மிக எளிதானது மனிதன் தன் தாயுடன் புணர்வதாகும்.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்: முஸ்தத்ரக்குல் ஹாக்கிம்)
வட்டிக்கொடுமை முன்னைய வேதங்களிலும் தடுக்கப்பட்டிருந்தமை நோக்கற்பாலது. இதனை அல்-குர்ஆனும் பின்வருமாறு கூறுகின்றது:
‘வட்டியை விட்டு அவர்கள் (யூதர்கள்) தடுக்கப்பட்டிருந்தும் …’ (4:161)
 
‘உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டி வாங்குகிறவர்கள் போல அவனிடத்தில் வட்டி வாங்க வேண்டாம்.’ (யாத்திராகமம்: 22:25)
‘கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்.’ (லூக்கா: 6:35)
வட்டி அடிப்படையிலான பொருளாதாரம் சமூகத்திற்கு எவ்வித நன்மையையும் அளிப்பதில்லை. மாறாக அதன் பாதிப்புக்களே அதிகம். ஒரு சாரார் உழைப்பில் ஈடுபடாமல் வெறும் பணத்திற்கு பணத்தை வியாபாரம் செய்வதும், உள்ளோர் இல்லாதோருக்கு கடன் வழங்கியுதவும் நற்பண்பு அற்றுப்போவதும், பணக்காரர் வறியோர் மீது கருனை காட்டுவது இல்லாது போவதும், எவ்விதப் பகரமுமின்றி ஒரு மனிதன் அடுத்த மனிதனின் பணத்;தை எடுப்பதும் வட்டியின் பல்வேறு பாதிப்புகளாகும்.

தனி மனித வருமானம் குறைவு, பணவீக்கம், வேலையின்மை போன்றவை வட்டியின் மற்றுமுண்டான மோசமான விளைவுகளாகும். இவ்வாறு வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியான பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றமை கண்கூடு.

நன்மையான காரியங்களைப் புரிவோருக்கு நன்மைகளை வாக்களிக்கின்ற இஸ்லாம் அவற்றைச் செய்வதற்கு உதவியாக இருப்பவர்களுக்கும் நன்மைகளை வாக்களிக்கின்றது. அது போலவே தீய காரியங்களைப் புரிவோருக்கு தண்டனைகளை வாக்களிக்கின்ற இஸ்லாம் அவற்றுக்குத் துணைபோவோருக்கும் தண்டனைகளை வாக்களிக்கின்றது. நன்மைக்குத் துணைபோவதும் நன்மையே. தீமைக்குத் துணைபோவதும் தீமையே.

மனிதனை அழித்துவிடும் மாபெரும் பாவங்களுள் ஒன்றான வட்டிக்கு வழங்கப்படும் தண்டனைகள் வட்டிசார் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருடன் மாத்திரம் நின்று விடுவதில்லை. மாறாக அதனை எழுதுவோர், அதற்கு சாட்சிகளாக நிற்போர் போன்ற அனைவருக்கும் அத்தண்டனைகள் கிடைக்கவே செய்கின்றன. பின்வரும் ஹதீஸ் இதனை தெளிவுபடுத்துகின்றது:
‘வட்டி உண்பவனையும், அதனை (பிறருக்கு) உண்ணக்கொடுப்பவனையும், அதனை எழுதுபவனையும், அதன் இரு சாட்சிகளையும் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் சபித்தார்கள். அவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமம் எனவும் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: சஹீஹு முஸ்லிம்)
இப்பின்புலத்திலேயே வட்டியை அடிப்படையாகக் கொண்டியங்கும் வங்கிகளில் கடமையாற்றுவதையும் நோக்க வேண்டியுள்ளது. வட்டி அடிப்படையிலான வங்கிகளில் வட்டி சாராத சில நடவடிக்கைகள் நடைபெறுகின்றமை உண்மையே. எனினும் அவை அனைத்தும் வங்கியின் வட்டிசார் நடவடிக்கைகளோடு உட்கட்டமைப்பில் இரண்டறக் கலந்துள்ளன. அத்துடன் இத்தகைய வங்கிகளில் கடமை புரிவோர் வங்கியின் வட்டிசார், வட்டிசாரா சகல நடவடிக்கைகளிலும் பங்கேற்க வேண்டிய நிலையே உள்ளது. எனவே, இத்தகைய வட்டி அடிப்படையிலான கொடுக்கல், வாங்கல்களைப் பிரதானமாகக் கொண்டியங்கும் வங்கிகளில் தொழில் புரிவது அனுமதிக்கப்படாததாகும்.

முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் முஸ்லிம்கள் வட்டி அடிப்படையிலான வங்கிகளில் கடமை புரிவது ஆகும் எனவும், இத்தகைய வங்கிகளில் முஸ்லிம்கள் தொழில் புரிவதை தடுத்துக் கொண்டால் முஸ்லிமல்லாதோர் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்குவது இலகுவாகிவிடும் எனவும், வட்டியில்லா இஸ்லாமிய அமைப்பைக் கொண்டுவருவதற்கு வட்டி அடிப்படையிலான வங்கிகளில் கடமை புரிவதன் மூலம் வங்கி நடவடிக்கைகளைப் பற்றிய அறிவைப் பெறலாமெனவும் கூறி வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் பார்ப்பதை நியாயப்படுத்த முயல்வது அடிப்படையற்றதாகும்.

மக்கள் உழைத்து ஜீவனோபாயம் பெறுவதற்குத் தேவையான வழிகளை அல்லாஹூ தஆலா நிறையவே ஏற்படுத்தி வைத்துள்ளான். முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகள், பெரும்பான்மையாக வாழும் நாடுகள் என்ற வேறுபாடின்றி பொருளீட்டும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. மக்கள் இவற்றை பயன்படுத்த தவறுவது மக்களின் கவனயீனமாகும். இதற்காக முஸ்லிம் சிறுபான்மை நாடுகளில் வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிவதற்கு அனுமதி எடுத்துக்கொள்வதற்கில்லை.

முஸ்லிம்கள் வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிவதன் மூலம் முஸ்லிம்களின் பொருளாதாரம் அந்நியர்களால் முடக்கப்படுவது தடுக்கப்படுகின்றது என்பதற்கில்லை. வங்கிக் கடமைகளில் ஈடுபடுவதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை திட்டமிடுவதற்கும் நேரடியான எவ்வித சம்பந்தமுமில்லை. அதே வேளை முஸ்லிம்களில் பலர் நீண்டகாலமாக வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிந்து கொண்டிருக்கும் நிலையிலும் முஸ்லிம்களின் பொருளாதாரம் முஸ்லிமல்லாதாரால் முடக்கப்படுகின்றதே.

வட்டியில்லா முறையிலான அமைப்பை வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிவதன் மூலம் கற்றுக் கொள்கின்ற அளவுக்கு இஸ்லாம் முஸ்லிம் சமூகத்தை வங்கரோத்து நிலையில் வைக்கவில்லை. இஸ்லாமிய பொருளாதாரம், முதலீடு, கொடுக்கல், வாங்கல் என்பதே வேறு.

எனவே வட்டியை அடிப்படையாகக் கொண்டியங்கும் வங்கிகளில் தொழில் புரிவது எந்த வகையிலும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல. இத்தகைய வங்கிகளில் தொழில் புரிவோர் இவ்வுண்மையை விளங்கிய பின்பும் தொடர்ந்து அவற்றில் தொழில் புரிவது தவறு. தமக்கென வேறு தொழில்களை அல்லது உழைப்பை கூடிய சீக்கிரம் பார்த்துக்கொள்வது கடமையாகும்.

இஸ்லாமிய முறையிலான முதலீட்டு நிறுவனங்களின் வருகையும் ஹலாலான பொருத்தமான மாற்றுத் தொழில்களுக்கு வழிசெய்கின்றது.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

No comments:

Post a Comment