Showing posts with label Interest. Show all posts
Showing posts with label Interest. Show all posts

Tuesday, May 13, 2014

வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிதல்

Copied from All Ceylon Jammiyathul Ulama's website, 
பிரசுரித்த தேதி 20.04.2004ஹிஜ்ரி தேதி 29.02.1425 பதிவு இல 006/ACJU/F/2004/011 

வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிதல் தொடர்பில் சன்மார்க்கத் தெளிவு வேண்டி தங்களால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2003.09.22 கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.

மேற்படி விடயம் சம்பந்தமான தெளிவு பின்வருமாறு:

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு அனைத்திற்கும் புனித இஸ்லாத்தின் சிறப்பான வழிகாட்டல்கள் சம்பூரணமாக காணப்படுகின்றன. அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதன் அவனின் வழிகாட்டல்களுக்கேற்ப நடப்பது கட்டாயமாகும். அல்லாஹ்வின் சட்டங்களும், ஏவல் விலக்கல்களும் ஒரு முஃமினின் முன் மற்றெல்லாவற்றையும் விட பெரியவை, முதன்மை பெறுபவை. ஹலால் (அனுமதிக்கப்பட்டது), ஹராம் (தடுக்கப்பட்டது) ஆகிய பதங்களுடன் இறை விசுவாசி எப்பொழுதும் மிகுந்த தொடர்புடையவன்.

மனிதனை சிருஷ்டித்த அல்லாஹ் அவனின் வாழ்வாதாரத்தைத் தேடிப்பெற்றுக்கொள்ளுமாறு கட்டளையிடுகின்றான். உழைத்து வாழ்வதை அல்லாஹ் சட்டரீதியாக ஆக்கியிருக்கின்றான். பொருளீட்டலின் போது கடைபிடிக்கப்படவேண்டிய விதிகளையும், ஒழுங்குகளையும் இஸ்லாம் மிகத் துல்லியமாக எடுத்தியம்பியுள்ளது.

கொடுக்கல் வாங்கல் என்பது குறைந்தது இரு நபர்களுக்கிடையில் நடைபெறும் ஓர் அம்சமாகும். இதில் சம்பந்தப்படும் திறத்தவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். ஒரு திறத்;தவர் கூட பாதிப்படைய இஸ்லாம் அறவே அனுமதிக்கவில்லை.

வியாபாரத்தை அனுமதித்த இஸ்லாம் வட்டியை முற்றாக தடுத்தது. வட்டியை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் திறத்;தவர்களில் ஒரு திறத்தவருக்கு ஏற்படும் அநீதி, மற்றும் பல பாதிப்புக்களைக் கவனத்திற்கொண்டே இது தடுக்கப்பட்டுள்ளது.

பின்வரும் அல்-குர்ஆனிய வசனங்கள் வட்டி பற்றி பேசுகின்றன:
‘வட்டியைத் திண்பவர்கள் ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவன் எழுத்திருப்பது போல் அன்றி எழமாட்டார்கள். இது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ‘வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றதே’ எனக் கூறியதால் ஆகும். அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி, வட்டியை தடைசெய்து வைத்துள்ளான்.’ (2:275)
‘விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நீங்கள் விசுவாசம் கொண்டவர்களாக இருப்பீர்களாயின், வட்டியில் எஞ்சியிருப்பதை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் போர் செய்வதை அறிந்து கொள்ளுங்கள்.’ (2:278, 279)