Tuesday, June 11, 2013

சுபஹு தொழுகையின் முக்கியத்துவம் (Importance of Subah)

யூதப் பெண் அமைச்சர் ஒருவரின் நேர்காணலைப் பத்திரிகையில் படிக்க நேர்ந்தது. கோல்டா மேயர் என்ற அந்தப் பெண் அமைச்சரிடம் யூதப் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கின்றனர். “கடைசி காலத்தில் யூதர்களை முஸ்லிம்கள் கல்லால் அடித்துக் கொல்லும் ஒரு நேரம் வரும் என்று முஸ்லிம்களின் நபி கூறியுள்ளாராமே.. அதைக் குறித்துத் தாங்கள் என்ன கூறுகின்றீர்..?” இதுதான் கேள்வி. அதற்கு அந்தப் பெண் அமைச்சர் என்ன கூறினார் தெரியுமா..? “ஆம். நாம் அதனை நம்புகின்றோம். ஒருநாள் அவர்கள் நம்முடன் போர் புரிவார்கள்”.
“அப்படி என்றால் அந்த நாள் எப்போது வரும்?” என்று மீண்டும் அவர்கள் கேள்வி கேட்க, அப்பெண்மணி
கூறினார் : “ஜும்ஆ தொழுகைக்கு வருவதைப் போன்று என்றைக்கு முஸ்லிம்கள் ஸுபுஹ் தொழுகைக்கு வருகின்றார்களோ அன்றுவேண்டுமென்றால் அது நடக்கலாம். அதுவரை நாம் அஞ்ச வேண்டியதில்லை.” அப்பெண்மணியின் மதி நுட்பத்தைப் பாருங்கள். இஸ்லாமியச் சமூகத்தை எவ்வாறுஎடை போட்டு வைத்துள்ளார் என்பதைக் கவனியுங்கள்.

ஜம்இயதுல் உலாமாவை திட்டி தீர்பவர்களில் எத்தனை பேர் சுபஹு தொழுகையை ஜமாத்தாக நிறைவேற்றுகிறீர்கள்? நிறைவேற்றுபவர்களில் எத்தனை பேர்உங்கள் குடும்பத்தை தொழுகைக்காக எழுப்புகிறீர்கள்?

“நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாகஇருக்கும் என கூறியுள்ளார்கள் . நாம் நயவஞ்சகன் அல்ல நயவஞ்சக சமுதாயம் (பெரும்பான்மையானவர்கள் என்பதால்..).

தேர்தலில் பெரும்பான்மைதான் வெற்றி பெரும் என்பது போல் நம் முஸ்லிம்களில் பெரும்பான்மை இப்படியானவர்கள் என்பதால் அல்லாஹ் எம் விண்ணப்பங்களை நிராகரித்திருக்கலாம் . இனியும் விழிக்காவிட்டால் தோல்வி நிச்சயமாகிவிடும்.

உங்களில் ஒருவர் தமதுகடமையை பாழாக்குவதால் ஒட்டு மொத்த சமூகமே தண்டிக்கப்படலாம் .நபி ஸல் அவர்கள் எம்மில் ஒவ்வொருவரையும் கட்டிடத்தின் கல்லுக்கு உதாரணம் காட்டியுள்ளார்கள். ஏனெனில் ஒன்றொண்டு சேர்ந்தே நூறு.


‘யூதர்களால் நாங்கள் நசுக்கப்படுகின்றோம்; எங்களைக் காப்பாற்று’ என்று நாம் இறைவனிடம் இருகை ஏந்துகின்றோமே.. இன்று நாம் சிங்கள இனவாதிகளால் நசுக்கப்படுகிறோம் .இறைவன் ஏன் நமது இறைஞ்சுதல்கள் மீது இரக்கம் காட்டுவதில்லை..? அவனது கட்டளையை நாம் நிராகரித்தோம்; அவன் நமது விண்ணப்பங்களை நிராகரிக்கின்றான் அவ்வளவுதான்.

இன்று ஜூம்மா தொழுகைக்கு ஆளில்லை என்று பள்ளிகளை உடைத்து உடைத்து பெரிதாக்குகின்றனர். நபியவர்கள் சுபஹு தொழுகைக்கு இடம் போதாவிட்டால்தான் பள்ளியை பெரிதாக்க அனுமதி தந்திருக்கிறார்கள்.

அதிகாலைத் தொழுகையில் அரை வரிசையை வைத்துக்கொண்டு அமெரிக்காவை வெற்றி கொள்ள நாம் ஆசைப்படுகின்றோம். பள்ளிவாசலில் பாதி வரிசை கூட இல்லை; பலஸ்தீன் எங்களுக்கே என்கிறோம். ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு நடத்துகின்றோம். முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும் என்கிறோம். எப்படிக் கிடைக்கும்? அதிகாலைத் தொழுகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

## மாற்றத்தின் நேரம் அதிகாலை. ##
உலகில் பெரும் மாற்றங்களை எல்லாம் அதிகாலைநேரத்திலேயேதான் அல்லாஹ்ஏற்படுத்தி உள்ளான். உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம்அதிகாலை நேரத்தில்தான் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.
ஹூத் அலை அவர்களின் சமுதாயமும் அதிகாலையிலயே அழிக்கப்பட்டது.
ஷுஐப் (அலை) அவர்களின் சமுதாயமும் அதிகாலையிலயே அழிக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொன்றாக நாம் கூறிக்கொண்டே போகலாம். மண்ணோடு மண்ணாக்கப்பட்ட அத்தனை சமூகங்களும் அநேகமாக அதிகாலை நேரத்திலேயே அழிக்கப்பட்டுள்ளனர். (இப்போது கூறப்பட்ட அத்தனை வசனங்களிலும் அதிகாலை என்பதற்கு ஸுபுஹ் எனும் அரபிச் சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.)

பண்டைய காலத்தில்தான் இவ்வாறு அதிகாலை என்பது அழிவிற்கான நேரமாகஇருந்தது என்று நாம் நிம்மதி அடைய வேண்டாம்.

இன்றும் அவ்வப்போதுஅல்லாஹ்வின் எச்சரிக்கைகள் அதிகாலை நேரத்திலேயேதான் வருகின்றன.
  • 2004-இல் ஏற்பட்ட சுனாமி அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது.
  • துருக்கி பூகம்பம், ஈரானின் நிலநடுக்கம் அனைத்தும் அதிகாலை நேரத்திலேயே நடைபெற்றன.
  • 2009 -இல் ஆப்ரிக்கா ஹெய்தியில் 3லட்சம் பேர் பலியான பூகம்பமும் அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது.
  • ஒவ்வொரு தனிமனிதருக்கு வரும் மாரடைப்பு எனும் திடீர் மரணமும் அநேகமாகஅதிகாலை 3முதல் 6 மணிக்குத்தான் வருகின்றது என்று மருத்துவக் குறிப்புகள்கூறுகின்றன.
இன்னும் ஏராளம் கூறலாம். இவை அனைத்தும் அல்லாஹ்வின் வேதனை .
ஒருவர் அல்லர், இருவர் அல்லர்.. ஒட்டு மொத்த ஒரு சமூகமே அல்லாஹ் கடமையாக்கிய கட்டாயத் தொழுகைகளில் ஒன்றை அலட்சியம் செய்கின்றது என்றால் அல்லாஹ்வின் வெற்றி எப்படிக் கிடைக்கும் நமக்கு ?

அண்மையில் இணையதளத்தில் ஒரு பள்ளிவாசல் முஅத்தினின் வேதனையைப் படிக்க முடிந்தது. அறிஞர்களிடம் அவர் கேட்ட மார்க்கவிளக்கத்தைஅதில் வெளியிட்டிருந்தார்கள். அவருடைய கேள்வி இதுதான்: “சிலசமயம்நான்அதிகாலைத் தொழுகைக்காக பாங்கு சொல்கின்றேன். தொழுகைக்கு யாரும் வருவதில்லை. நான் காத்திருப்பேன். சூரியன் உதித்து விடுமோ என்ற பயம் வருகின்றது. எனவே இந்தப் பள்ளிவாசலை மூடிவிட்டு வேறு பள்ளிவாசலுக்குச் சென்று ஜமாஅத்துடன் நான் ஸுபுஹ் தொழுகையை நிறைவேற்றலாமா?” ஸுப்ஹானல்லாஹ்! சமூகத்தின் நிலையைப் பாருங்கள்.

ஒவ்வொரு நாளும் வானவர்கள் இரு தடவை இந்தப் பூமிக்கு வருகை தருகின்றார்கள். அவர்கள் அனைவரும் அஸர் தொழுகையிலும் ஸுபுஹ் தொழுகையிலும் சந்தித்துக் கொள்கின்றார்கள். பணி முடித்துத் திரும்பும் வானவர்களிடம் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ் கேட்கின்றான்: “எனது அடியார்களை எந்நிலையில் சந்தித்தீர்கள்? எந்நிலையில் விட்டு வந்தீர்கள்?

பல ஆண்டுகளாக ஸுபுஹ் தொழுகைஎன்றால் என்ன என்றே தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரைக் குறித்துவானவர்கள், யா அல்லாஹ்! அவர் தூங்கிக் கொண்டிருந்தார் என்றோ, ஸுபுஹ்தொழாமல் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார் என்றோ கூறுவதாக இருந்தால் எப்படி இருக்கும்? அதிலும் 5 ஆண்டுகள் 10ஆண்டுகளாக இதே பதிலை வானவர்கள் அல்லாஹ்விடம் கூறினால் நம்மைக் குறித்து அல்லாஹ் என்ன நினைப்பான்?

அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.”
-(பைஹகீ)
ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள்.

இஸ்லாமிய சட்டவியலில், அறிஞர்கள் சொல்லக்கூடிய ஒரு விடயம் தான்
"அல்லாஹ் கடமையாக்கிய ஒரு விடயத்தை நிறைவேற்றுவதற்கு இன்னுமொரு காரியம் நடைபெற்றால் தான் அது சாத்தியம் என்றிருந்தால், குறிப்பிட்ட அந்த விடயமும் கடமையாக மாறும்"

அந்த அடிப்படையிலே, ஒருவருக்கு இரவு 10 மணிக்குத் தூங்கினால் தான் அவரால் நேரத்துக்கு எழும்ப முடியும் என்றிருந்தால், இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் கருத்துப்படி குறிப்பிட்ட மனிதர் இரவு 10 மணிக்கு தூங்குவது, அவருக்கு கடமையாகும். 

கைக்கு எட்டும் தூரத்தில் அலாரம் வைப்பதை தவிர்த்து எழும்பி போய் off பண்ணும் தூரத்தில் வையுங்கள். படுக்க செல்லு முன் நீர் அருந்தி விட்டு படுக்கைக்கு செல்வதால் வெளிக்கு போகும் உணர்வு அதிகாலையில் ஏற்படும்.

தயவு செய்து இதை tag செய்தோ share பண்ணியோ பல வருங்களாக சுபஹு தொழ மறந்த உங்கள் நண்பர்களுக்கு, குடும்பத்தினருக்கு அறியச் செய்யுங்கள். முடிந்தால் துண்டுப்பிரசுரம் விநியோகித்தாவது அறியச் செயுங்கள்.

யா அல்லாஹ் எமது நாட்டிலுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் சுபஹு தொழும் மக்களாக எங்களை ஆக்கிவைப்பாயாக !

No comments:

Post a Comment