Sunday, October 12, 2014

புகழ் என்பது எமக்குரியதல்ல...!


புகழில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. மதுபோதையை விட புகழ் போதை பயங்கரமானது. புகழில் மயங்கும் மனிதன் அடுக்கடுக்காக பாவங்களை செய்கிறான். பணம், பட்டம், பதவி, பொருள் முதலியவற்றால் ஒரு மனிதன் புகழ் அடையும் போது அவனை அறியாமலே அதில் மூழ்கி விடுகிறான். இஸ்லாம் புகழுக்குரியவனாக அல்லாஹ்வையே கூறுகிறது. மற்றவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டவை என்றே இயம்புகிறது.

புகழை ஏற்படுத்தும் மோகங்களில் இருந்து மனிதன் விடுபட்டு விட்டானென்றால் அவனிடம் அடக்கம், பணிவு அல்லாஹ்விடத்தில் கீழ்ப்படிவு எல்லாமே அமைந்து விடும். ஆசைகளிலிருந்து அவன் விடுபடாமல் இருப்பதே துன்பங்களுக்கெல்லாம் காரணமாக அமைகிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘மக்கள் சுட்டிக்காட்டிப் பேசும் அளவுக்கு ஒருவன் மார்க்க விஷயத்திலும் உலக விடயங்களிலும் பிரபலமடைந்து விட்டால் அது ஒன்றே அவனுக்கு போதிய தீங்கு விளைவித்து விடும். இதிலிருந்து தப்பியவர்கள் மிகச் சிலர்.


ஒருவன் பேரும் புகழும் அடையும் போது அவனிடத்தில் பெருமை, கர்வம், ஆடம்பரம் போன்ற இறைவன் வெறுக்கக் கூடிய செயல்கள் வந்து விடும் என்பதே பெருமானார் (ஸல்) அவர்களின் கருத்தாகும்.

ஆண்கள் எப்போதும் தம்மைப் பற்றியே பேசிக் கொண்டு இருப்பதும் பெண்கள் தம்மைப் பற்றி தம்பட்டம் அடிப்பதும் இறைவன் வெறுக்கும் புகழும் போதையில் மயங்கியே ஆகும். இறையச்சமும், விசுவாசமும் அல்லாஹ்வின் ஏவல்களைச் செய்கின்ற பக்குவமும் மனிதனிடம் அமையும் போதுதான் அவன் அல்லாஹ்வின் நல்லடியான் ஆகிறான்.

காலித் பின் மஃதான் (ரழி) அவர்களைப் பற்றி கூறுவார்கள். அவரைச் சூழ அமர்ந்திருக்கும் அன்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால் அவ்விடத்தைவிட்டு உடனே எழுந்து போய்விடுவார்களாம். எங்கே பிரபல்யம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் அவர்களுக்கு.

‘என் பெயர் ஜும்மா பள்ளி வரை பேசும் அளவு பிரபல்யமானதே’ என அழுவார்களாம் ஒர் அடியார் இவ்வாறு இறையடியார்கள் புகழ் ஏற்பட்டு விடுமோ என பயந்து தமது வாழ்வை பாதுகாத்திருக்கிறார்கள்.

ஆனால் நாமே இன்று புகழ் பெறவே ஏராளமான காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம். எமது திருமணங்கள், எமது விழாக்கள், எமது வியாபாரங்கள் எமது வீடுகள், எமது வாகனங்கள் அனைத்தும் புகழை பறைசாற்றும் பிரபல்யத்தை பெற்றுக் கொடுக்கும் அம்சங்களாகவே பாவித்து வருகிறோம். ‘ஒரு மிஸ்கீனாக இருக்கச் செய்து ஒரு மிஸ்கீனாகவே மரணிக்கச் செய்வாயாக’ என கண்மணி (ஸல்) பிரார்த்தனை செய்தார்களே அந்த பிரார்த்தனை எமதுள்ளத்திலிருந்து வருமா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எமது ஈமானின் பலமும் பலவீனமும் இப்போது புரிகின்றதல்லவா?

எமது முன்னோர்கள் ஆடம்பர படாடோப வாழ்க்கை வாழவில்லை. இந்நாட்டில் சாதாரண வாழ்க்கையே வாழ்ந்தார்கள். அதனால் இனங்களிடையே ஒன்றுமையும் புரிந்துணர்வும், சகோதரத்துவமும் காணப்பட்டன. போட்டி, பூசல் இல்லாத நிம்மதியான வாழ்வு இருந்தது. இன்று இனங்களுக்கு இடையே விரிசல் ஏற்பட எமது ஆடம்பர, புகழ் விரும்பிய வாழ்க்கைப் போக்கும் ஒரு பங்கு வகிக்கிறது. என்பதை நாம் மறக்கக் கூடாது. எனவே இன்றைய கால கட்டத்தில் இவற்றையெல்லாம் சிந்தித்து செயல்படுவதோடு அல்லாஹ்விற்கு பொருத்தமான பெருமானாரின் வழிமுறைக்கு ஏற்ற வாழ்வை அமைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும்.

No comments:

Post a Comment