Sunday, October 12, 2014

காய்ச்சல் - ஒரு நோய் அல்ல?

ஒருவருக்கு நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் தொற்று ஏற்படும்போது உடல் வெப்பநிலை உயர்கின்றது. இது காய்ச்சல் (Fever) எனப்படுகின்றது. 

உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப்பிடிக்க வில்லை. அலுப்பு , அமைதியின்மை, உடல் வலி , உடல் பாரம், அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும். இது தான் காய்ச்சலின் அடையாளம். ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C). இது ஆளாளுக்கு,நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல் , ஜுரம் என்கிறோம். இதனை அனுபவப்படாதவர்களே இல்லை என்னுமளவு சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.

காய்ச்சல் ஒரு நோய் அல்ல அது உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆயுதம் ஆகும். உடலின் ஏனைய இடங்களில் கிருமித்தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதை காட்டும் அறிகுறியாகும். நோயுண்டாக்கும் அனேக பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும், antibody-களையும் உருவாக்குகிறது. இதனால், வீரியம் குறைவான காய்ச்சல்களுக்கு, மருத்துவம் செய்யாது விட்டுவிடுவதும் உண்டு. 


எனினும், இத்தகைய காய்ச்சல்கள், வேறு பிரச்சினைகளுக்குரிய நோய் அறிகுறிகளுடன் (symptoms) சேர்ந்திருக்கவில்லை என்பதை உறுதிப் படுத்துவதற்காக மருத்துவரின் ஆலோசனை தேவைப்படுகின்றது. 

100.40F வெப்பநிலைக்கு மேல் காய்ச்சல் ஏறும்போது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு. சன்னி, வலிப்பு முதலியவை ஏற்படக்கூடும். இத்தகைய காய்ச்சல்களுக்கு உடனடியான மருத்துவ உதவி தேவை.

காய்ச்சலைக் குறைப்பதற்குப் பயன்படும் மருந்துகள் காய்ச்சலடக்கிகள் எனப்படுகின்றன. பாராசித்தமோல் (Paracetamol), ஆஸ்பிரின் (Aspirin) போன்றவை இவற்றுள் அடங்கும்.

காய்ச்சலைச் செயற்கையாக உண்டாக்குவதன் மூலம் நோய்களைத் தீர்க்கும் முறையும் ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த மருத்துவரான ஜூலியஸ் வாக்னர் வொன் ஜோரெக் (Julius Wagner von Jauregg) (1857-1940) என்பவர் இந்த முறையை அறிமுகப்படுத்தினார். எனினும் தற்காலத்தில் இம்முறை பயன்படுத்தப்படுவதில்லை.

அதிக காய்ச்சல் இருந்து குணமாகிய நோயாளிகள் சிலருக்கு, இதனுடன் சம்பந்தப்படாத நோய்கள் சில தணிந்திருக்கவும், சில சமயம் முற்றாகவே குணமாகியும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

டாக்டரை எப்போது பார்க்க வேண்டும்?

  • மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால். 100.2°F மேல் காய்ச்சல் அதிகரித்தால்(37.9°C).
  • 3 முதல் 6 மாதக் குழந்தைக்கு காய்ச்சல்101°F (38.3°C) அல்லது அதற்கு மேல் அதிகமானால்.
  • 6 முதல் 12 மாதக் குழந்தைக்கு காய்ச்சல் 103°F (39.4°C)கு மேல் அதிகமானால்.
  • இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாளுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால்.
  • சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் 48 முதல் 72 மணி நேரத்திற்கு மேல் நீடித்தால்.
  • 105°F (40.5°C) க்குமேல் காய்ச்சல் இருந்து சிகிட்சை செய்தும் குறையா விட்டால்.
  • எரிச்சல், பிதற்றல், சுவாசிப்பதில் சிரமம், கழுத்து விறைத்தல், கை கால் செயலிழப்பு,  ஜன்னி ஏற்பட்டால், தொண்டை கரகரப்பு, காதுவலி, இருமல் இருந்தால்.
  • பாராசித்தமோல் (Paracetamol), ஆஸ்பிரின் (Aspirin) போன்ற காய்ச்சல் மாத்திரைகள் பலனளிக்காவிட்டால் உடனே டாக்டரை பார்க்க வேண்டும்

காய்ச்சல் வந்துவிட்டால் என்ன சாப்பிடலாம்?

காய்ச்சல் வந்துவிட்டாலே எதுவும் சாப்பிடக் கூடாது என்று பொதுவான கருத்து உள்ளது. அது மிகவும் தவறானது. ஆனால், காய்ச்சல் நேரத்தில்தான் உடலுக்கு அதிக கலோரிச் சத்து தேவைப்படுகிறது. எனவே ஊட்டச் சத்தான உணவுக்கு, காய்ச்சல் நேரத்திலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். காய்ச்சல் வந்தால் குடலில் அழற்சி இருக்கும்; நாக்கில் கசப்புணர்வு இருக்கும். நோய்த் தொற்று இருக்கும் நிலையில் குமட்டல், வாந்தி உணர்வும் இருக்கும்.

மிருதுவான, அதே சமயம் காரம் – மசாலா இல்லாத திரவ உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சத்துமாவு கஞ்சி, ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், வேக வைத்த காய்கறிகளை மசித்துச் சாப்பிடலாம். பழங்கள் சாப்பிடலாம். பழச்சாறு குடிக்கலாம். ஏனெனில் காய்ச்சல் இருக்கும் நிலையில் வெப்ப வெளியேற்றம் காரணமாக உடலின் உயிர்ச் சத்துகளில் ஒன்றான நீர்ச் சத்து அளவு குறையும். எனவே குடிநீர் அதிகம் குடிக்க வேண்டும்.

காய்ச்சல் இருக்கும் நிலையில் பழச்சாறு, இளநீர், மோர் குடிக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இவற்றைச் சாப்பிட்டால் காய்ச்சல் அதிகமாகும், ஜலதோஷம் வந்து சேரும் என்ற கவலையும் ஏற்படுகிறது. இது வீண் கவலை. காய்ச்சல் இருந்தாலும் இவற்றைச் சாப்பிடும் நிலையில் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்து கிடைத்து, காய்ச்சல் குறையும்.

காய்ச்சல் என்பது ஓர் அறிகுறிதான்.நோய்த் தொற்று (viral infection) காரணமாகவே காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே காய்ச்சல் குறைந்தவுடன், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் புரதச் சத்து அதிகம் தேவை.இந் நிலையில் பால், தயிர், பருப்பு – கீரைகள் – காய்கறிகள் நிறைந்த உணவு ஆகியவற்றை காய்ச்சல் விட்ட பிறகு தொடர்ந்து சாப்பிட வேண்டும். பழங்கள் சாப்பிடுவதும் புரதச் சத்தை உடலுக்கு அளிக்கும். அசைவம் சாப்பிடுவோர் முட்டை சாப்பிடலாம். அசைவ உணவில் காரம்-மசாலா அதிகம் கூடாது.

நோயெதிர்ப்பு சக்தியூட்டும் உணவுகள்

எந்த ஒரு நோய் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் சக்தியை, நம் உடம்பானது தானாகவே உற்பத்தி செய்து கொள்ளும். இது, நோய்களை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராகச் சண்டைப் போட்டு அவற்றை உடலில் இருந்து வெளியேற்றிவிடும் அல்லது அழித்துவிடும்.

நீங்கள் உட்கொள்ளும் வைட்டமின்கள் (Vitamins) மற்றும் கனிமங்களின் (Minerals) அளவைப் பொறுத்துத்தான் இந்த சக்தி இயங்கும். அதனால் இந்தச் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டாலே போதும், மருந்தின்றி காய்ச்சலை விரட்டியடிக்கலாம்!

நோயெதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள சில சத்துக்களையும் உணவுகளையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
சத்துள்ள உணவு அதோடு vitamin A, the vitamin B complex (vitamins B-1, B-2, B-5, B-6, folic acid) , vitamin C, சரியான அளவு எடுத்துக்கொள்வது நோயெதிர்ப்பு neutrophil களை உருவாக்கி நோய்க்கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும். காப்பர் சத்து: நம் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள்தான் தொற்றுநோய்க் கிருமிகளை முழுவேகத்துடன் எதிர்க்கக்கூடியவை.காப்பர் சத்தானது வெள்ளை அணுக்களுக்கு அந்த சக்தியை அளிக்கக்கூடியதாக உள்ளது. பனிவரகு, சாமை உள்ளிட்ட தினைவகைகள், பீன்ஸ், சன்னா, பட்டாணி, தாமரைத்தண்டு, செல்மீன்கள், சாக்லெட் ஆகியவற்றில் காப்பர் சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் E:இளமையிலிருந்தே வைட்டமின் ணி சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, வயதானபின்னும் ஃப்ளு காய்ச்சல் போன்ற தொந்தரவு வராது. காரணம், வைட்டமின் E யானது அதிகமாக உடலுக்குள் செல்லச் செல்ல… நோயெதிர்ப்பு உயிரணுக்களின் அளவானது இரண்டு மடங்காக உற்பத்தியாகியிருக்கும். இதனால் அவை காய்ச்சலைத் தரும் வைரஸ்களை எளிதில் கொன்றுவிடும்.சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், பட்டாணி, கோதுமை, தானிய வகைகள், காய்கறி எண்ணெய்கள், மீன், மீன் எண்ணெய், முட்டை, கோழி ஆகியவற்றில் வைட்டமின் E அதிகம் . வைட்டமின் B12: B12ன் தலையீட்டால்தான் காய்ச்சலைத் தரும் கிருமிகள் உடலுக்குள் வரும்போதெல்லாம் நோயெதிர்ப்புச் சக்தியை உற்பத்தி செய்யும் செல்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. வெள்ளை ரத்த அணுக்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்ய B12தான் காரணம்.ஈரல், முட்டை, பால் போன்ற அசைவ உணவுகளில் B12 மிக அதிகமாக உள்ளன. பீன்ஸ், ஆரஞ்சு, கீரைவகைகள், பட்டாணி, சூரியகாந்திவிதைகள், முழுதானிய விதைகள் ஆகியவற்றிலும் இச்சத்து போதியளவு உள்ளன. துத்தம் (ZINC):உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை மேலும் மேலும் வளர்க்க துத்தச்சத்து அவசியமாக உள்ளது. தானிய வகைகள், அனைத்துத் தினைவகைகள், பீப், போர்க் போன்றவற்றில் துத்தச்சத்து அதிகமாக உள்ளன. தாவர வேதிப்பொருள்:உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை வலுவாக்கி, நோய்க்கிருமிகளை அழித்து நிர்மூலமாக்க தாவர வேதிப் பொருட்கள் அவசியம்தேவை. வெங்காயம், ஆப்பிள் (குறிப்பாக தோல்கள்), கறுப்பு டீ, பூண்டு, மிளகு, பெர்ரி, திராட்சை, தக்காளி ஆகியவற்றில் வேண்டிய மட்டும் தாவர வேதிப் பொருட்கள் உள்ளன. இவை காய்ச்சலை (Flu) உருவாக்கும் கிருமிகளை அண்டவிடுவதில்லை. சந்தோஷமான சூழல்:குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக இருக்கும் சூழலை உருவாக்கிக்கொள்வது என்பது காய்ச்சலை வரவிடாமல் தடுக்கும் ஓர் உத்தியாகும். அன்பான பேச்சு, ஆதரவான நடவடிக்கைகள், சுற்றுலா, இசை…. இவையாவும் மனதை சந்தோஷப்படுத்துவதால், நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நாளுக்கு நாள் கூடுகிறதாம். 


No comments:

Post a Comment