நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுமாறு முஸ்லிம்களை வலியுறுத்திய அதேவேளை, ஏனைய சமயங்களையும் அச்சமயங்களைப் பின்பற்றுகின்றவர்களையும் மதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்கள். எனவே, இஸ்லாம் ஏனைய சமயங்களை மதிக்கும் உயர்ந்த பண்பைக் கொண்டது. ஆனால், இஸ்லாத்தைப் பல வகையிலும் விமர்சிக்கின்ற கிறிஸ்தவர்களும் யூதர்களும் இஸ்லாத்தின் இவ்வுயர் பண்புக்கு மாற்றமான பண்புகளையே வரலாறு நெடுகிலும் வெளிப்படுத்தி வந்துள்ளனர். இவ்வகையிலான ஓர் அம்சமாக அமைவதே கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் மதத்தின பெயரால் மேற்கொண்ட கொடூரமான சிலுவை யுத்தங்களாகும்.
நபி (ஸல்) அவர்களது காலத்திலிருந்தே யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்கள், சூழ்ச்சிகள், யுத்தங்கள் போன்ற கெடுபிடிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நடவடிக்கைகள் வியாபகமடைந்து கி.பி. 11ம் நூற்றாண்டளவில் சிலுவை யுத்தங்களாகப் பரிணமித்தன. சிலுவைப் படையெடுப்பின் ஊடாக முஸ்லிம் சமூகத்தை அரசியல், பொருளாதார, சமய, சமூக ரீதியாகப் பின்னடையச் செய்வதே கிறிஸ்தவர்களினதும் யூதர்களினதும் முழு நோக்கமாக இருந்தது. சிலுவை யுத்தங்கள் என்பவை, கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் பைத்துல் முகத்தஸைக் கைப்பற்றி, முஸ்லிம்களை அரசியல் ரீதியாகத் தோற்கடித்து, இஸ்லாமிய ஆட்சியை ஒழித்துக் கட்டும் நோக்கில் மேற்கொண்ட யுத்தம் எனலாம். இவ் யுத்தத்தில் ஈடுபட்ட ஐரோப்பிய வீரர்கள் இது கிறிஸ்தவர்களின் புனிதப் போர் என அடையாளம் காட்டுவதற்காக சிலுவை அடையாளங்களைத் தமது ஆடைகளில் கொழுகிக் கொண்டு யுத்தத்தில் ஈடுபட்டதனால் 'சிலுவை யுத்தம்' எனப் பெயரிடப்பட்டது.